எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம் கொள்ளையனுக்கு 4 நாள் போலீஸ் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட வீரேந்திர ராவத்தை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் வடபழனி, விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், வேளச்சேரி, தரமணி ஆகிய இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் டெபாசிட் மையங்களில் சென்சாரை மறைத்து ரூ.70 லட்சம் வரை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம், எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்படி போலீசார் தனிப்படை அமைத்து ஆவணங்களை திரட்டி விசாரணை மேற்கொண்டனர். அதில் வடமாநில கொள்ளையர்கள் சென்னையை குறி வைத்து  பல லட்ச ரூபாய் கொள்ளையடித்தது  தெரியவந்தது.

தொடர்ந்து ஏடிஎம் கொள்ளையர்கள் அரியானாவில் இருப்பது தெரியவந்தது. அதன்படி போலீசார் அரியானா விரைந்து, கடந்த 23ம் தேதி அரியானாவில் அமீர் என்ற கொள்ளையனை கைது செய்தனர். பின்னர் அவனிடம் நடத்திய விசாரணையில் கொடுத்த தகவலின் அடிப்படையில் அமீரின் கூட்டாளியான வீரேந்தர ராவத்தையும் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மேலும் இந்த வழக்கில் யார் யாருக்கு தொடர்புள்ளது, வேறு எங்கெங்கு இதுபோன்று குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதெல்லாம் குறித்து விசாரிக்க, வீரேந்திர ராவத்தை 7 நாள்  போலீஸ் காவலில் எடுக்க தரமணி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு 18வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது, வீரேந்திர ராவத்தை ஆஜர்படுத்தினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி,  வீரேந்தர் ராவத்தை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்து உத்தரவிட்டார்.

Related Stories: