தமிழக பட்ஜெட்டில் அண்ணா பெயரில் நலத்திட்டங்கள்: காஞ்சி அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செய்தபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், நேற்று காலை சென்றார். அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது அண்ணாவின் பெயரில், அரசு புதிய திட்டங்களை செயல்படுத்தும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. முதல்வராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல்முறையாக நேற்று காஞ்சிபுரம் சென்றார்.  காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை பார்வையிட்டு, பார்வையாளர்கள் குறிப்பேட்டில் தனது வருகையை பதிவு செய்தார்.

அதில், மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய்... இது பேரறிஞர் அண்ணாவின் அறிவுரை. அவர் வகுத்து தந்த பாதையில் கழக ஆட்சி பீடு நடைபோடும் என்பதை உறுதி ஏற்கிறேன்,  நன்றி என எழுதி கையெழுத்திட்டார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக 6வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்து பெற வேண்டும் என்று நான் கருதிக்கொண்டு இருந்தேன். கொரோனா தொற்றின் காரணமாக, ஊரடங்கு இருக்கின்ற இந்த சூழ்நிலையில், அதற்கான வாய்ப்பு இன்றைக்குத்தான் எனக்கு கிடைத்தது. எனவே, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, எங்களை ஆளாக்கிய, கழகத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து, அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து நான் மரியாதை செலுத்துகிறேன்.

“மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று” என்ற அறிவுரையை தம்பிமார்களுக்கு அவர் எப்போதும் வழங்கிக்கொண்டு இருந்தவர். அதை நினைவுப்படுத்தி, “அவர் தந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடுநடை போடும் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நான் அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கின்ற இந்த நேரத்தில் குறிப்பேடு புத்தகத்தில் கூட நான் எழுதியிருக்கிறேன் என்றார். .ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்று அவருடைய பெயரில் பல நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டது, இந்த ஆட்சிக்காலத்திலும் அதுபோன்று தொடர்ச்சியாக அரசுத் திட்டங்களுக்கு அவர் பெயர் வைக்கப்படுமா என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறபோது, நீங்கள் எதிர்பார்ப்பது போல அந்த செய்திகள் எல்லாம் வரும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக முதல்வருடன் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், எம்பி செல்வம், எம்எல்ஏக்கள்  க.சுந்தர், எழிலரசன் ஆகியோர் இருந்தனர். முன்னதாக காஞ்சிபுரம் கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, எஸ்பி எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கினர். வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார், காஞ்சிபுரம் சரக டிஐஜி மா.சத்யபிரியா, எஸ்பிக்கள் ராணிப்பேட்டை ஓம்பிரகாஷ் மீனா, காஞ்சிபுரம் எஸ்.பி. டாக்டர்.சுதாகர் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* கழகத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து, அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன்.

* ‘‘மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று” என்ற அறிவுரையை பேரறிஞர் அண்ணா எப்போதும் வழங்கிக்கொண்டு இருந்தார்.

* அந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடுநடை போடும் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: