திண்டுக்கல்லில் ரூ.20 கோடி செலவில் இலங்கை தமிழர்களுக்கு 1,000 வீடுகள் கட்டப்படும்!: அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு..!!

திண்டுக்கல்: தமிழகத்திலேயே முதல்கட்டமாக திண்டுக்கல்லில் ரூபாய் 20 கோடி செலவில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு 1000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள்ளதாக மாநில சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, அடியனூத்து, தோட்டனூத்து, கூவனூத்து ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்று அவர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள இலங்கை வாழ் தமிழர்களிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மஸ்தான், முகாம்களில் இலங்கை வாழ் தமிழர்கள் விடுத்த கோரிக்கையை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

முதல்கட்டமாக தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இலங்கை வாழ் தமிழர்களுக்கு 20 கோடி ரூபாய் செலவில் 1000 தொகுப்பு வீடுகள் கட்டப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை வக்பு வாரியத்திற்கு சொந்தமான 7,000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மஸ்தான் குறிப்பிட்டார். விரைவில் இந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் வக்பு வாரியத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: