நெல்லை மாவட்டத்தில் 24 மணி நேரமும் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க 97865 66111 எண் அறிமுகம் : கலெக்டர் விஷ்ணு தகவல்

நெல்லை: நெல்லை  மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை 24  மணி நேரமும் தெரிவிக்க 97865 66111 என்ற புதிய எண்ணை கலெக்டர் விஷ்ணு நேற்று  காலை அறிமுகப்படுத்தினார்.நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின்  அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு  புகார் தெரிவிக்கும் வகையில் ‘வணக்கம் நெல்லை’ 97865 66111 என்ற புதிய  எண்ணை கலெக்டர் விஷ்ணு, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்த  நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நெல்லை  மாவட்டத்தில் பொதுமக்கள் துரிதமாக போன் மூலமும், வாட்ஸ்அப் மூலமும்  தங்களின் அடிப்படை வசதிகள், ரோடு வசதிகள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இதன்படி 97865 66111 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம். இந்த எண்ணிற்கு வரும்  குறைகள் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மூலம் அந்தந்த துறைகளுக்கு உடனடியாக  அனுப்பப்படும். இதற்காக முக்கிய துறைகளின் தலைவர்கள் அடங்கிய வாட்ஸ் அப்  குரூப் தொடங்கப்பட்டு, கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்காணிக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள்  உடனடியாக அந்தந்த துறைத் தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, நிவர்த்தி  செய்யப்படும். பொதுமக்களுக்கும் அது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.  புகார் தெரிவிப்பவர்கள் எண் ரகசியம் காக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில்  ஏற்கனவே கொரோனா கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இதன்  மூலம்  இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை தொடர்பு  கொள்ளப்பட்டுள்ளது. இந்த 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அப்படியே  பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்படும்.  மக்கள் சாசனம் தெரிவித்துள்ளதின் அடிப்படையில் குறிப்பாக பட்டா மாற்றம்  என்றால் 30 நாட்கள், அதன் அடிப்படையில் குறைகள் குறிப்பிட்ட காலத்திற்குள்  நிவர்த்தி செய்யப்படும். அடிப்படை வசதிகள், குடிநீர் பிரச்னைகள், ரோடு  வசதிகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு புகாரும்  அந்தந்த கிராமம், தாலுகா வாரியாக பதிவு செய்யப்படும். இந்தப் புகார்களுக்கு  அந்தந்த துறைகளின் தலைவர்கள் தான் பொறுப்பு. அதை கலெக்டர், மாவட்ட வருவாய்  அலுவலர் கண்காணிப்பர். அந்தந்த துறைத் தலைவர்கள் நடவடிக்கை எடுத்து  புகார்களுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் சுகன்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) மகாலெட்சுமி, கலெக்டர் அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம், தேசிய தகவலியல் மைய அலுவலர்கள் தேவராஜன், ஆறுமுகநயினார் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: