பெண்ணின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத பெண் இன்ஸ்பெக்டரை கண்டித்து மாதர், வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை: மண்ணடி ஏழுகிணறு முத்துஷா தெருவை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் துபாயில் பணியாற்றி வரும் ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், பெண்ணின் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் விசாரித்தபோது, திருமணத்தை நிறுத்துவதற்காக இளம்பெண்ணின் உறவுக்கார வாலிபர் ஒருவர் அந்த பெண்ணுடன் ஒன்றாக இருக்கும் போட்டோவை துபாயில் உள்ள மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் அவர் இணைத்து அனுப்பிய கடிதத்தில், “இளம்பெண்ணுக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது. அவளை நீங்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டாம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர், பூக்கடை மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகார் மீது இன்ஸ்பெக்டர் ஜெயந்தி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த வாலிபர், இளம்பெண் பற்றி தவறாக கூறி போட்டோ, கடிதங்களை மீண்டும் துபாயில் உள்ள மாப்பிள்ளைக்கு அனுப்பியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த மாப்பிள்ளை, “தனக்கு உங்கள் பெண் வேண்டாம்” என்று பெண்ணிடம் பெற்றோரிடம் கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த பெண்ணின் பெற்றோர், மாதர் சங்கத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இளம்பெண் திருமணம் பாதிக்கப்பட்டது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காத பூக்கடை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தியை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பூக்கடை காவல்நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ஜெலால் தலைமை வகித்தனர். இதில் கலந்துகொண்டவர்கள், இன்ஸ்பெக்டர் ஜெயந்தியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: