எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் திருடிய விவகாரம் அரியானாவில் கைதான 3வது குற்றவாளி சிறையில் அடைப்பு: முக்கிய கொள்ளையனை நெருங்கியது தனிப்படை

சென்னை: சென்னையில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான 15 ஏடிஎம் மையத்தில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் இருந்து லட்சக்கணக்கான பணம் மட்டும் மாயமாகியது. பணம் எடுத்தவர்கள் யார் என்று தெரியாமல் வங்கி அதிகாரிகள் குழப்பமடைந்தனர். இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் செல்போன் சிக்னல் உதவியுடன் அரியானா மாநிலம் பல்லப்கர்க் கிராமத்தில் பதுங்கி இருந்த அமீர் அர்ஷ் என்பவனை கடந்த 23ம் தேதி கைது ெசய்தனர். அவனிடம் இருந்து ரூ.4.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவன் அளித்த தகவலின் படி அதே கிராமத்தை சேர்ந்த வீரேந்திர ராவத்(23) என்பவனை தனிப்படையினர் கைது செய்து கடந்த 27ம் தேதி சென்னைக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே மற்றொரு கொள்ளையனான அதே கிராமத்தை சேர்ந்த நஜீம் உசேன்(22)  என்பவனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.  அவனிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணம், ஒரு செல்போன், 3 சிம் கார்டுகள் மற்றும் கார் ஒன்று பறிமுதல் செய்தனர். பிறகு குற்றவாளியை தனிப்படையினர் நேற்று மதியம் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து நேராக பீர்க்கங்கரணை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை  தொடர்ந்து 3வது குற்றவாளியான ரஜீம் உசேனை போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ராயிலாநகர் போலீசார் முதலில் கைது செய்யப்பட்ட  கொள்ளையன் அமீர்அர்ஷ் 5 நாள் காவல் நேற்று முடிவடைந்தது. அவனை போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவனிடம் நடத்திய விசாரணையில் 9 பேர் கொண்ட குழுவில் அவனது தலைமையிலான குழுவினர் 7 எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் இருந்து ரூ.17.5 லட்சம் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், நூதன முறையில் பணத்தை திருடியது குறித்து போலீசார் முன்னிலையில் அவர் நடித்தும், பணத்தை எடுத்தும் காட்டினார். அதை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

விசாரணையில் அளித்த தகவல்கள் அனைத்து வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் அரியானா மாநிலத்தில் தலைமறைவாக உள்ள சதகத்வுல்லா கான் உட்பட 6 பேரை தனிப்படை போலீசார் நெருங்கிவிட்டதாகவும் அனைவரையும் ஓரிரு நாளில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: