சென்னை மக்களின் குடிநீர் தேவையை தீர்க்க காவிரி ஆற்றின் உபரி நீரை கொண்டுவர புதிய திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை நிர்வாக அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, சென்னை குடிநீர் வாரிய திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். கூட்டத்தை தொடர் ந்து, அமைச்சர் ேக.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் தற்பொழுது நாளொன்றிற்கு  சுமார் 850 மி.லி. குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை நாள்தோறும்  1,146 மி.லி. அளவிற்கு வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக 150 மி.லி. கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் முடியும். மேலும், புதிதாக 400 மி.லி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிதி ஒதுக்கீடுக்காக நின்று கொண்டிருக்கிறது. விரைவில் ரூ.5250 கோடி செலவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.  இதை காட்டிலும் 2010ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை போடப்பட்டு காவிரி ஆற்றில் மிகையாக உள்ள காலங்களில் அந்த தண்ணீரை  சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் ஒன்று போடப்பட்டுள்ளது. ரூ.6000 கோடியிலான அந்த திட்டமும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் மிகை நீர் வரும் போது மட்டுமே இந்த திட்டம் பயன்படும். அதாவது காவிரி ஆற்று நீர் கடலில் கலந்து வீணாகும் நிலையை தடுத்து, அந்த நீரை எடுத்து வந்து பாலாறு பக்கம் முழுமையாக தேக்கி வைக்கப்படும்.

இந்த தண்ணீர் சென்னை ஏரிகளுக்கு கொண்டு வரப்பட்டு, தேவைப்படும் போது சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்குவதற்கான திட்டம். இந்த திட்டம் நடைமுறைக்கு வர எப்படியும் 5 ஆண்டு காலம் வரை ஆகும்.  சென்னையில் இன்று 88 லட்சம் மக்கள் வசிப்பதாக ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. இது இன்னும் அதிகரிக்கும் போது அவர்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்குவதற்கு இந்த திட்டம் பயன்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை இப்போதிருந்தே குடிநீர் வடிகால் வாரியம் பணியை தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள 35,000 தெருக்களில்  குடிநீர் குழாய் அமைப்பு இல்லாத சுமார் 8,600 தெருக்களுக்கு குடிநீர்  குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு நேரடியாக குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் உத்தரவு படி கையில் எடுத்துள்ளோம். தெருக்கள் மிக குறுகலாக இருப்பதால் அதை விரைவாக செய்ய முடியவில்லை.  என்றார்.  

Related Stories: