வந்தவாசி அருகே போலீஸ் விசாரணையில் திருப்பம் குழந்தை விற்பனை வழக்கில் நாடகமாடிய தாயும் கைது: சென்னை, ஈரோட்டில் மேலும் 4 பெண் புரோக்கர்கள் சிக்கினர்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பவானி (27). இவரும் சரத்குமார்(29) என்பவரும் 7 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். திருப்பூரில் ஒரே வீட்டில் தங்கியிருந்த நிலையில், பவானி கர்ப்பமாகவே, கடந்த ஜனவரி மாதம் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஜனவரி 16ம் தேதி பவானிக்கு ஆண் குழந்தை பிறந்தது.  பின்னர் அவரை அடித்து விரட்டிவிட்டு வேறு ஒரு பெண்ணை சரத்குமார் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து, பவானி வந்தவாசி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், ‘‘திருமணம் ஆனவுடனே குழந்தை பிறந்ததால் மற்றவர்களுக்கு சந்தேகம் வரும். எனவே, குழந்தையை சில நாட்களுக்கு உறவினரிடம் கொடுத்து வைக்கலாம் என கணவர் கூறினார்.

அதனை நானும் ஏற்றுக் கொண்டேன். ஆனால், எனக்கு தெரியாமல் குழந்தையை யாருக்கோ விற்றுள்ளார். மேலும், வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். புகாரின்பேரில் சரத்குமார், புரோக்கர் தண்டு ஏழுமலை(45) என்பவரிடம், 80 ஆயிரத்திற்கு குழந்தையை விற்றதும், அவர் சென்னையை சேர்ந்த புரோக்கர் ஜோதி என்பவரிடம் விற்றதும், அதற்கு உடந்தையாக புரோக்கர்களான சென்னையை சேர்ந்த கலைவாணி, அமுல், முனியம்மாள், ஈரோட்டை சேர்ந்த நதியா(30), நந்தினி(28), கோபியை சேர்ந்த ஜானகி(30) ஆகியோர் இருந்ததும் தெரியவந்தது.  பின்னர், அந்த குழந்தை மும்பையை சேர்ந்த தொழிலதிபர் பாலுவிடம் 5 லட்சத்திற்கு விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மும்பையில் இருந்த குழந்தை கடந்த 27ம் தேதி திருப்பூர் கொண்டு வரப்பட்டு, பவானியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சரத்குமார், தண்டு ஏழுமலை, நந்தினி, ஜானகி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். புரோக்கர்களான ஜோதி, கலைவாணி, முனியம்மாள் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் மாலை சென்னையிலும், நதியாவை ஈரோட்டிலும் கைது செய்தனர். புரோக்கர் ஜோதியிடம் விசாரித்தபோது, சரத்குமார், பவானி இருவரும் சேர்ந்துதான் குழந்தையை விற்றனர். அதற்காக இருவரும் கையெழுத்திட்ட பத்திரம் கொடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தொடர் விசாரணையில் சரத்குமார், பவானி ஆகிய இருவரும் புரோக்கர்களிடம் குழந்தையை விற்றுவிட்டு, போலீசில் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, தாய் பவானியையும் போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: