தாக்குதல் அதிகரிக்கும் அபாயம்: இஸ்ரேலிடம் இருந்து டிரோன் எதிர்ப்பு ஆயுதத்தை உடனடியாக வாங்க முடிவு

* ஜம்மு தாக்குதல் வழக்கு என்ஐஏ.விடம் ஒப்படைப்பு

* காஷ்மீர் ராணுவ தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஸ்ரீநகர்: டிரோன் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாகி இருப்பதை தொடர்ந்து, இஸ்ரேலிடம் இருந்து உடனடியாக டிரோன் எதிர்ப்பு ஆயுதங்களை வாங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தின் மீது மூன்று நாட்களுக்கு முன், தீவிரவாதிகள் டிரோன்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இந்த தாக்குதல் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ரத்னுசாக்- கலுசாக் ராணுவ நிலைகள் அருகே குஞ்ச்வானி பகுதியில்  இரண்டு முறை டிரோன்கள் பறந்தது கண்டறியப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டது. இதன் காரணமாக மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

ராணுவ பலத்தில் உலகளவில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா இருந்த போதிலும், அதனிடம் டிரோன் தாக்குதலை முறியடிக்கும் ஆயுதங்கள் இல்லை. இதனால், இஸ்ரேலிடம் இருந்து உடனடியாக அதற்கான ஆயுதங்களை வாங்க, ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.  டிரோன் எதிர்ப்பு தாக்குதலில், உலகளவில் இஸ்ரேலின் தொழில்நுட்பம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அதனிடம் உள்ள ‘ஸ்மாஷ்- 2000 பிளஸ்’ என்ற டிரோன் தடுப்பு அமைப்பை பயன்படுத்தும் பயிற்சியை இந்திய ராணுவத்தினர் ஏற்கனவே பெற்று வருகின்றனர்.  கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் இதுவரை 300 டிரோன்கள் ஆயுதங்களுடன் இந்திய எல்லையில் ஊடுருவி உள்ளன. பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளாலும், ஐஎஸ்ஐ உளவுத் துறையாலும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இவை இயக்கப்படுகின்றன.

 இவற்றை தாக்கி அழிப்பதற்கான ஆயுதங்கள் இல்லாததால், வீரர்கள் அதை நோக்கி துப்பாக்கியால் மட்டுமே சுடுகின்றனர். சில நேரங்களில் அவை வீழ்த்தப்படுகின்றன. மற்றப்படி, அவை மீண்டும் பாகிஸ்தானுக்குள் தப்பிச் செல்கின்றன. இஸ்ரேலின் டிரோன் எதிர்ப்பு அமைப்பை துப்பாக்கியில் பொருத்தி தாக்குதல் நடத்த முடியும். இந்திய கடற்படைக்கு இந்த பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளன. இதேபோல், ராணுவம் மற்றும் விமானப்படையிலும் இந்த தொழில்நுட்பம் விரைவில் பயன்படுத்தப்படும். டிரோன்கள் மிகு குறைந்த உயரத்தில் பறப்பதால் ரேடாரில் சிக்குவது இல்லை. அதனால், அவற்றின் நடமாட்டத்தை கண்காணிப்பதில் சிக்கல் உள்ளது.

ஜம்மு விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம், எதிர்காலத்தில் தீவிரவாதிகளின் முக்கிய போர் யுக்தியாக டிரோன் தாக்குதல் மாறும் அபாயம் உள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள ராணுவ தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எல்லைகளில் டிரோன்களின் ஊடுருவல் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அதே நேரம், ஜம்மு விமானப்படை தளத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கை, தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒன்றிய அரசு ஒப்படைத்துள்ளது.

பிரதமர் ஆலோசனை

ஜம்மு காஷ்மீரில் டிரோன் தாக்குதல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், டெல்லியில் அது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டனர். எதிர்கால அச்சுறுத்தலுக்கு ஏற்ப ராணுவத்தை பலப்படுத்துவது குறித்தும், நவீன ஆயுதங்களை வாங்குவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இரவிலும் தாக்கும்

இஸ்ரேலின் ஸ்மாஷ் 2000 பிளஸ் டிரோன் எதிர்ப்பு அமைப்பை ஏகே 47 மற்றும் வேறு எந்த துப்பாக்கியிலும் பொருத்த முடியும். இவை பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் டிரோன்கள் மற்றும் இதர பறக்கும் பொருட்களை துல்லியமாக கண்டறிந்து தாக்கும்.

Related Stories: