ஆண்டிபட்டி அருகே 6 ஆண்டாக சுகாதார வளாகத்திற்கு பூட்டு-மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே, 6 ஆண்டாக தண்ணீர் வசதியின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே, ராஜதானி ஊராட்சியில் ஜக்கம்மாள்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெண்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2012ல் ரூ.1.85 லட்சத்தில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டி திறக்கப்பட்டது.

2 ஆண்டுகளாக பெண்கள் பயன்படுத்தி வந்தனர். அதன்பின் கடந்த 6 ஆண்டாக சுகாதார வளாகம் மூடப்பட்டது. இதனால், பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க அவதிப்படுகின்றனர். எனவே, சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஜக்கம்மாள்பட்டி கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘சுகாதார வளாகம் பூட்டிக் கிடப்பதால் பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதியும் இல்லை. எனவே, ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி, மீண்டும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்’ என்றனர்.

Related Stories: