வந்தவாசி அருகே போலீஸ் விசாரணையில் பரபரப்பு ₹5 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை மும்பையில் இருந்து மீட்பு

* சென்னை, ஈரோடு புரோக்கர்களுக்கு தொடர்பு அம்பலம்

* தந்தை உட்பட 4 பேர் கைது; மேலும் 5 பேருக்கு வலை

வந்தவாசி: வந்தவாசி அருகே மும்பை தொழிலதிபருக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதுதொடர்பாக குழந்தையின் தந்தை மற்றும் சென்னை, ஈரோட்டை சேர்ந்த புரோக்கர்கள் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 புரோக்கர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர்  பவானி(27).

அதே கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(29). இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். பவானி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தங்கி வேலை செய்து வந்தார். சரத்குமாரும் அவரோடு தங்கியுள்ளார். இதில் பவானி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைந்தது உறவினர்களுக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் எனக்கருதிய காதல்ஜோடி, கடந்த ஜனவரி மாதம் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், ஜனவரி மாதம் 16ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பவானிக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணமான அதே மாதத்தில் குழந்தை பிறந்த சம்பவம் வெளியே தெரியக்கூடாது எனக்கருதிய சரத்குமார், தனது குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு சில ஆண்டுகள் கழித்து திரும்ப வாங்கிக்கொள்ளலாம் என பவானியிடம் சமாதானம் கூறியுள்ளார். இதை நம்பிய பவானி, குழந்தையை கணவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் குழந்தையை சரத்குமார் ரகசியமாக விற்று விட்டார். இந்த சம்பவம் சரத்குமாரின் பெற்றோருக்கும் தெரிந்துள்ளது. இதனிடையே , குடும்ப தகராறில் சரத்குமார்  பவானியை  வீட்டைவிட்டு விரட்டி உள்ளார். சொந்த ஊருக்கு செல்லாமல் புலிவாய் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பவானி தங்கியிருந்தார்.

அப்போது, சென்னை அடுத்த திருப்போரூரை சேர்ந்த ஒரு பெண்ணை சரத்குமார் திருமணம் செய்ய திட்டமிட்டதை அறிந்த பவானி, கடந்த வாரம் வந்தவாசி மகளிர் போலீசில் புகார் செய்தார்.  இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 13ம் தேதியே வேறு ஒரு பெண்ணுடன் சரத்குமாருக்கு திருமணம் நடந்திருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பவானி, சரத்குமாரின் பெற்றோரிடம் சென்று, ‘‘என் குழந்தையையாவது என்னிடத்தில் கொடுத்துவிடுங்கள்’’ என கேட்டுள்ளார். அப்போதுதான் அவரது குழந்தை விற்கப்பட்ட விவரம் பவானிக்கு தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சரத்குமாரை பிடித்து விசாரித்ததில் பல பரபரப்பு தகவல்கள் அம்பலமானது.

பவானிக்கு பிறந்த குழந்தையை சரத்குமார் வந்தவாசி டவுன் தாசில்தார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த புரோக்கர் தண்டு ஏழுமலை(45) என்பவரிடம் ₹80 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். பச்சிளங் குழந்தையை தண்டு ஏழுமலை, சென்னையை சேர்ந்த ஜோதி என்ற மற்றொரு புரோக்கரிடம் விற்றுவிட்டார்.

இதில் சென்னையை சேர்ந்த கலைவாணி, அமுல், முனியம்மாள், ஈரோட்டை சேர்ந்த நதியா(30), நந்தினி(28), கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த ஜானகி(30) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் பாலு என்பவருக்கு ₹5 லட்சத்திற்கு குழந்தை விற்கப்பட்டதும் தெரிந்தது.

இதற்கிடையே, திருப்பூர் போலீசாரும் இந்த வழக்கில் களம் இறங்கி தீவிர விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக பாலுவுக்கு போன் செய்து குழந்தையை ஒப்படைக்க போலீசார் எச்சரித்தனர். அதன்பேரில் விமானம் மூலம் பாலு குழந்தையை அழைத்து வந்து நேற்றுமுன்தினம் திருப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து பவானியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.  இதுதொடர்பாக வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து குழந்தையின் தந்தையான சரத்குமார், தண்டு ஏழுமலை, ஈரோட்டை சேர்ந்த நந்தினி, கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த ஜானகி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும், குழந்தையை வாங்கி விற்றதில் உடந்தையாக இருந்த மற்ற புரோக்கர்களான ஜோதி, கலைவாணி, அமுலு, முனியம்மாள், நதியா ஆகியோரை வலைவீசி தேடிவருகின்றனர். குழந்தையை விற்கும் இந்த கும்பல், வேறு பகுதிகளிலும் குழந்தைகளை கடத்தி விற்றுள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: