ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஊரக வளர்ச்சி  திட்ட பணிகளை கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு  செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஊரக வளர்ச்சி துறை திட்ட பணிகளை கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். முதலாவதாக பொன்னேரி ஊராட்சியில் சின்ன பொன்னேரி ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள பகுதியில் ₹33 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சி கூடத்தை ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, ஏலகிரி மலை பகுதிக்கு சென்ற கலெக்டர் அங்குள்ள பல்வேறு ஊராட்சி துறையின்கீழ் அமைக்கப்பட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ₹2 கோடியில்   கட்டப்பட்டுள்ள கோடை விழா அரங்கை ஆய்வு செய்தார்.

அப்போது, அங்கு சமையல் கூடம் இல்லாததால் சமையல் கூடம் ஏற்படுத்தி கோடை விழாவை தவிர்த்து மற்ற சுப நிகழ்வுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

அரசுக்கு வருவாய் ஏற்படுத்தும் வகையில் வாடகை விட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, 8 ஏக்கரில் அத்தனாவூரில் ஏற்படுத்தியுள்ள பழத்தோட்டத்தை பார்வையிட்டார்.

மேலும், தோட்டத்தை மேம்படுத்திட ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுலாத்துறை, தோட்டக்கலை துறை மற்றும் மீன்வளத்துறை இணைந்து புதிய திட்டத்தினை தயார் செய்து, இது சம்பந்தமாக பயிற்சி அளிக்கும் வகையில் துறை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க  உத்தரவிட்டார். நிலாவூரில் ₹34 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். மேலும், அரசு மானியத்தில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டு வரும் கிணற்றை ஆய்வு மேற்கொண்டார். நிலாவூரில் ஆதிதிராவிடர் காலனியில் தற்போது பேவர் பிளாக் சாலை அமைத்து உள்ளதை பார்வையிட்டார். நிலாவூரில் உள்ள ஒரு விவசாய நிலத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் இறைக்கும் ஆயில் இன்ஜினை கலெக்டர் இயக்கினார்.

இதில், திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், ஜோலார்பேட்டை பிடிஓக்கள் பிரேம்குமார்,   சங்கர், பொன்னேரி ஊராட்சி செயலாளர் சின்னத்தம்பி, மண்டலவாடி ஊராட்சி செயலாளர் மகேஷ், ஏலகிரி மலை ஊராட்சி செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: