அமைச்சர் கே.என்.நேரு பேட்டி டெண்டரில் முறைகேடு நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை: மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்  நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.  பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் அறிவித்த 7 திட்டங்களில்  நகர்புறசீரமைப்பு திட்டம்  என்பது ஒரு திட்டம் ஆகும். அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்குவது, அடிப்படை வசதிகளை செய்து தருவது, சிறந்த நகரங்களை உருவாக்குவது  திட்டத்தின் நோக்கம் ஆகும்.  மேலும் பட்ஜெட் கூட்டம் நடைபெறும் போது இந்த ஆண்டு என்னென்ன பணிகள் செய்யப்போகிறோம் என்பதை பற்றியும், ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 100 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளது. இந்நிலையில் 150 எம்எல்டி திட்டங்கள் நடைமுறைக்கு வந்து பணிகள் வேகமாக நடைபெறாததால் பணிகளை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் சென்னைக்கு தண்ணீர் பிரச்னைகள் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். நாள் ஒன்றுக்கு 1200 எம்எல்டி தண்ணீர் இருந்தால் தான் முழுமையான தண்ணீர் கிடைக்கும். தற்போது வீராணம் ஏரி போன்ற ஏரிகளில் இருந்து 900 எம்எல்டி தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடுகள் பற்றி அதிகாரிகள் கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது போல் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஈசிஆரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

அமைச்சர் நேரு கூறுகையில், 10 ஆண்டுகள் கழித்து சென்னை மக்களின் தண்ணீர் பிரச்னையை போக்குவதற்காக 400 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஈசிஆரில் ஆரம்பிக்க உள்ளோம். அந்த பணிகள் முடிப்பதற்கு எப்படியும் 2 ஆண்டு ஆகும். அப்போது சென்னைக்கு 100% தண்ணீர் கொடுக்கப்படும். முதல்வர் அறிவுறுத்தியதை போல் ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்,அதையும் செய்து முடிப்போம் என்றார்.

Related Stories: