அவதூறு ஆசாமி கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை: அண்ணா, கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்  பத்திரிகையாளர்களை சமூக வலைத்தளங்களில் தொடர் அவதூறு செய்து வந்தவர் சென்னை கே.கே.நகரை சேர்ந்த கிஷோர் கே.சாமி. இவர் அதிமுக ஆதரவாளர் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும் அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது.  இதுகுறித்து திமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஒருவர் சங்கர் நகர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் படி கடந்த 14ம் தேதி கிஷோர் கே.சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

அதைதொடர்ந்து கொரோனா ஊரடங்கின் போது பெண் பத்திரிகையாளர் ஒருவரை டிவிட்டரில் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்திலும் பதிவு செய்தார்.

இதுகுறித்து பெண் பத்திரிகையாளர் கிஷோர் கே.சாமி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிஷோர் கே.சாமியை கடந்த 16ம் தேதி அதிரடியாக கைது செய்தனர்.  மேலும் கடந்த 2019ம் ஆண்டு தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிருபரை தனிப்பட்ட விதமாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து அவதூறாகவும் பதிவு செய்து மிரட்டல் விடுத்தார். புகாரின் படி அதிமுக ஆட்சியின் போது கிஷோர் கே.சாமி மீது ஐபிசி 153(ஏ), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அரசியல் பின்புலத்தில் கிஷோர் கே.சாமி இருந்ததால் அவரை அப்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யவில்லை.

தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 10.11.2019ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் படி நேற்று முன்தினம் சிறையில் இருந்த கிஷோர் கே.சாமியை கைது செய்தனர். ஏற்கனவே 3 வழக்குகளில் கைதாகி இருக்கும் அவர் மீது, நடிகை ரோகிணி உட்பட பலரும் தொடர்ந்து புகார் அளித்து வருவதால், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்  பரிந்துரையின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிஷோர் கே.சாமியை நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: