அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது: ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை:   தமிழகத்தில் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஆன்லைன் வசதியை  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  சென்னை  தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:   தமிழகத்தில் உள்ள 51 அரசு  பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர கல்லூரிகளிலும்  25ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது.  பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://tngptc.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், இணைப்பு பெற்ற 3 கல்லூரிகள், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் 420 ஆகியவற்றில்  உள்ள  18, 120 இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  பிளஸ் 1 வகுப்பில் சேர என்ன தகுதியோ அதேதான் பாலிடெக்னிக்கில் சேரவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் ஜூலை 19ம் தேதி நடத்தப்படும். அதற்கு பிறகு மற்ற இடங்களுக்கு கவுன்சலிங் நடத்தப்படும். மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை இன்று தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். துணை வேந்தர் நியமனங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அதை துணைவேந்தர் நியமனக் குழுதான் முடிவு செய்யும். பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மேலும் பிளஸ் 2 வகுப்பு  முடித்த சிபிஎஸ்இ மாணவர்கள் மதிப்பெண்கள் ஜூலை 31 அன்று வெளியாகும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் வாய்ப்பு வழங்கும் வகையில் ஜூலை 31க்கு பிறகுதான் மாணவர் சேர்க்கை தொடங்கும். உயர் நீதிமன்ற உத்தரவின் படி தனியார் கல்லூரிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும். அதிக கட்டணம் வசூல் செய்யும் கல்லூரிகள் மீது புகார்  வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: