Medical Trends:மேஜிக் வாட்டர்

நன்றி குங்குமம் டாக்டர்

தேங்காய் நீர் சுவையானது மட்டுமல்ல. பல ஆற்றல்களை உள்ளடக்கியது. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கும், உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கும் மிகவும் ஏற்ற பானம். வெள்ளை சர்க்கரை, செயற்கை இனிப்புகள், நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பானங்கள் பருகுவதைவிட கொழுப்புச்சத்து இல்லாத தேங்காய் நீர் பருகுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. முக்கியமாக, பொட்டாசியம் அதிகம் நிறைந்தது தேங்காய் நீர். இதில் இருக்கும் தாதுக்கள் குறை ரத்த அழுத்தத்தை சமன் செய்யும் திறன் கொண்டது. இதன் காரணமாகவே இதனை மேஜிக் வாட்டர் என்று புகழ்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

சிவப்பு இறைச்சி ரசிகர்களுக்கு கெட்ட செய்தி

மாட்டிறைச்சி, செம்மறி ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சியை விரும்பி உண்கிறவர்களுக்கு இது கெட்ட செய்தி. யார் ஒருவர் அதிகம் சிவப்பு இறைச்சியைத் தொடர்ந்து உண்டு வரும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு Diverticulis என்கிற diverticular disease வரும் அபாயம் அதிகம் என்கிறது புதிய ஆராய்ச்சி. செரிமானப் பாதையில் ஏற்படும் அழற்சியான Diverticulis, சிவப்பு இறைச்சியை விரும்பி உண்கிற மேற்கத்திய நாடுகளில் அதிகம் ஏற்பட்டு வருவதற்கும் இதுவே காரணமாம்.

மோப்ப சக்தியால் மலேரியாவை கண்டுபிடிக்கலாம்!

மலேரியா நோயானது ஒரு நபரை தாக்கியுள்ளதா என்பது அவரின் ரத்தத்தை பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே கண்டறியப்படும். அந்த வகையில் மலேரியா நோயினால் எவரேனும் பாதிக்கப்பட்டால், அந்த நபரை நாய்களின் மோப்ப சக்தியின் மூலமாக கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வினை ஆப்பிரிக்க நாடான காம்பியா மாகாணத்தில், அமெரிக்காவின் ஆய்வு கவுன்சில் மேற்கொண்டுள்ளது.

குழந்தைகளிடம் செல்போனை கொடுக்காதீர்கள்!


 Paediatric academic society என்ற அமைப்பு, குழந்தைகளின் பேச்சுத்திறன் குறித்த ஆராய்ச்சியை சமீபத்தில் நடத்தியது. இந்த ஆய்வில் ஸ்மார்ட் போன், டேப்லெட்ஸ் போன்றவற்றை பல மணிநேரம் தொடர்ந்து உபயோகிக்கும் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பேச்சாற்றல் தாமதப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை கையடக்க சாதனங்கள் உதவியுடன் வீடியோ, சினிமா பார்க்கும் வழக்கம் உள்ள குழந்தைகளின் பேச்சுத்திறன் பாதிக்கப்படுதல் 49 சதவீதம் அதிகரிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

தாம்பத்திய உறவு


தாம்பத்தியம் என்பது இனப்பெருக்கத்துக்கானது மட்டுமே அல்ல. ஒருவரின் மன, உடல் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கவும் தாம்பத்திய உறவு உதவுகிறது. மன அழுத்தம் குறையவும், நம்பிக்கையை அதிகரிக்கவும், அதிகமான வலியை சகித்துக்கொள்ளும் திறனை வளர்க்கவும், வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பினை உருவாக்கவும், மூளை செல் வளர்ச்சி போன்ற பல்வேறு நலன்களுக்கும் முறையான தாம்பத்தியம் உதவி செய்கிறது.

இயற்கையிலிருந்து விலகுவதுதான் காரணம்!

நாம் இயற்கையிலிருந்து பிறந்தவர்கள். இயற்கையோடு இயைந்து வாழ வேண்டியவர்கள். இதை மறந்ததால்தான் இன்று இத்தனை நோய்களாலும் அவதிப்படுகிறோம் என்று இயற்கை வாழ்வியல் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இன்று பெரும்பான்மையான மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த வாழ்க்கைமுறையால் அவர்கள்  இயற்கையின் வேர்களிலிருந்து நீக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

மீண்டும் அந்த இயற்கையோடு இணைக்க போதுமான நேரம் எடுத்துக் கொண்டால் அது நம் மனதையும், ஆன்மாவையும் சக்தி வாய்ந்ததாக மாற்றும். உங்கள் கொல்லைப்புறத்தில் வெறுங்காலுடன் நடக்கும்போது, உங்கள் கால்விரல்களுக்கு இடையே புல் இருப்பதை உணர முயற்சிப்பதுகூட சிலருக்கு எளிமையான, போதுமான ஒரு பயிற்சியாக இருக்குமாம்.    

அதிக சூரிய ஒளியும் ஆபத்தே!


சூரிய ஒளியால் பல்வேறு நலன்கள் உண்டு என்றாலும், அதுவே அளவுக்கு அதிகமாகிறபோது ஆபத்தானதாக மாறுகிறது. சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் உடலின் மீது அதிக அளவில் படும்போது, அது உடல் சரும இறுக்கம், சருமம் கருப்பாதல், புள்ளிகள் தோன்றுதல் போன்ற சரும பிரச்னைகள் ஏற்பட காரணமாகிறது. புறஊதாக்கதிர்கள் சருமத்தில் நீண்ட நாட்கள் படும்போது அது தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க நிழலுள்ள இடங்களுக்குச் செல்வதும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதும் நல்லது.
 

ஏதாவதொரு பொழுதுபோக்கு!


உளவியல் சொல்லும் தத்துவம் இது. ஏதாவதொரு பொழுதுபோக்கு செயலில் ஈடுபடுவது என்பது, உங்களை ஆக்கிரமித்து, உங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதற்கு ஓர் எளிய வழியாக இருக்கிறது.ஏதாவதொன்றை சிறிது சிறிதாக சேர்ப்பது, அனைத்து சரியான சிறிய விவரங்களையும் ஒன்று சேர்த்து உருவாக்குதல் மற்றும் வடிவமைத்தல், மலையேற்றம் செல்வது  போன்ற பிற கண்கள் மற்றும் மூளைக்கான ஏதாவதொரு பொழுதுபோக்கு செயலில் ஈடுபடலாம். நீங்கள் ஈடுபடும் பொழுதுபோக்கு செயல்கள் மூளை செயல்திறனுக்கு சவாலானதாக இருப்பது உங்களுடைய மூளையின் நலன் மேம்படுவதற்கு உதவியாக இருக்கும்.

தூங்குவதிலும் ஒழுக்கம்!

‘நாம் தினசரி தூங்குகிற நேரத்தை சரியான முறையில் இருக்குமாறு வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்கி, எழுகிற பழக்கத்திற்கு ஆளானால் அதுவே நம் உடல்நிலை மாற்றங்களைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக அமைந்துவிடும்’ என்று பரிந்துரைக்கிறார்கள் உலகளவிலான தூக்கவியல் வல்லுநர்கள்.

ஏனெனில், நமது உடல் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் போன்ற இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு, அதோடு ஒத்திசைந்து செயல்படும் தன்மை உடையது. எனவே, உங்கள் தினசரி தூக்கத்தை சரியான முறையில் வழக்கப்படுத்திக் கொண்டால், உங்கள் தினசரி வாழ்க்கையை எப்போது துவங்கி எப்போது முடிக்க வேண்டும் என்பதை உங்கள் உடலே நன்கு அறிந்து கொண்டு அதன்படி செயல்படும் என்று அதற்கு காரணமும் சொல்கிறார்கள்.

ஒரு கைப்பிடி நட்ஸ் போதும்!


பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி, வேர்க்கடலை, வாதுமை கொட்டை(Wal Nuts) ஆகிய பருப்பு வகைகளை உண்பதால் இளம் வயது மரணம், ரத்தக்குழாய் சார்ந்த இதயநோய், பலவிதமான புற்றுநோய் முதலானவை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என சமீபத்திய BMC Medicine ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. உதாரணத்துக்கு, வேர்க்கடலை என்றால் நிறைய சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டாலே போதும் என்கிறார்கள்.

- தொகுப்பு : குங்குமம் டாக்டர் டீம்

× RELATED Medical Trends