தமிழகத்தில் ஊரடங்கு 28ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ குழு, உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகள் இயக்கப்படுமா?

சென்னை: தமிழகத்தில் கடந்த மே மாதம் ஒரே நாளில் அதிகப்பட்சமாக கொரோனா தொற்று பரவல் 36 ஆயிரம் வரை இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். அதன்படி, கடந்த மே மாதம் 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இதையடுத்து கடந்த 7ம் தேதி முதல் வருகிற 28ம் தேதி (திங்கள்) அதிகாலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 100 சதவீதம் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்குகிறது.

கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து தற்போது தினசரி பாதிப்பு 6 ஆயிரமாக உள்ளது. இதை மேலும் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28ம் தேதி அதிகாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

இதையொட்டி தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பது மற்றும் சென்னையை போன்று மற்ற மாவட்டங்களிலும் பொது போக்குவரத்தை குறைந்த அளவில் அனுமதிக்கலாமா? பேருந்துகளை மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல அனுமதிக்கலாமா? என்பது உள்ளிட்டவைகள் குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

Related Stories: