தமிழகம் ஒளிமிக்கதாக மாறும் வகையில் முதல்வர் பதிலுரை உள்ளது: சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சு

சென்னை: தமிழகம் ஒளிமிக்கதாக மாறும் வகையில் முதல்வர் பதில் அமைந்துள்ளது என்று பல்வேறு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.   தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அதை தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது:  ஜவாஹிருல்லா (மமக): மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கும் இந்த அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்ல தமிழகம் வளமான ஒளிமிக்கதாக இருக்கும் வகையில் முதல்வர் பதில் அமைந்துள்ளது. சிஏஏவுக்கு எதிராக போராடியவர்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.  சதன் திருமலைக்குமார்(மதிமுக): ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட வழக்குகள் எல்லாம் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.

ஈஸ்வரன்(கொமதேக): விவசாயத்துக்கு தனி பட்ஜெட் என்பது எல்லோரும் வரவேற்கக்கூடிய ஒன்று. தனி பட்ஜெட் போடும்போது கால்நடைகளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.   சிந்தனை செல்வன் (விசிக): முதல்வர் பதில் உரையில் சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அதை பாராட்டுகிறோம்.   தளி ராமகிருஷ்ணன் (இந்தி கம்யூ):  வடமாவட்டங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் செய்யாறு மற்றும் திண்டிவனத்தில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பையும், ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.

  நயினார் நாகேந்திரன் (பாஜ): கோயில்களுக்கு இந்த ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன். ஏராளமான திருக்கோவில்களில் ஒரு கால பூஜைகள் கூட செய்ய முடியாத நிலை உள்ளது. அங்கு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

செல்வப்பெருந்தகை(காங்கிரஸ்): கலைஞர் இந்த அவையில் இல்லை என்றாலும், அவரது குரலை முதல்வர் குரலாக கேட்கிறோம். கொரோனா தொற்றால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை. 75 சதவீதம் கட்டணம் கட்டினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில குடும்பங்களில் அந்த தொகையை கட்ட முடியாமல் அரசு பள்ளிகளில் சேர்க்க முடியாமல் உள்ளனர்.

அண்ணா, கலைஞரை உள்ளடக்கி முதல்வர் உரை - துரைமுருகன் புகழாரம்

முதல்வர் இந்த உரையை நிகழ்த்தும் போது உன்னிப்பாக கவனித்தேன். பேச்சின் ஆரம்பத்தில் நீதி கட்சியை தொட்டு புறப்பட்டார். யாரும் சாதாரணமாக அங்கிருந்து புறப்படமாட்டார்கள். பெரியாருக்கு வந்து, அண்ணாவை, கலைஞரை வணங்கி அதன் பின்பு தனது உரைக்கு வந்தார். அண்ணா வெற்றி பெற்ற பின்பு முதன் முதலாக பட்ஜெட் பதிவு செய்வதை மாடியில் இருந்து கேட்டிருக்கிறேன். அதன் பின்பு கலைஞர் பட்ஜெட் பதிவு செய்ததை சட்டமன்ற உறுப்பினராக இருந்து கேட்டிருக்கிறேன். அண்ணாவின் பேச்சில் இருந்த அணுகுமுறை, கலைஞர் பேச்சில் இருந்த ஆட்சித் திறன் இரண்டையும் உள்ளடக்கி இன்று முதல்வர் உரையாற்றியிருப்பதை நான் நீண்ட காலம் இந்த அவையில் இருந்தவன் என்ற முறையில் பார்த்திருக்கிறேன்.

 ஆட்சி வரும் போகும் வரும். ஆனால் இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று எத்தனையோ படையெடுப்புகளை நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆட்சியை காப்பாற்ற போகிறவர், திராவிட இயக்கத்தையும் காப்பாற்றப் போகிறவர் முதல்வர் தான், எனக்கு மன நிறைவான உரையை தந்திருக்கிறார். இன்னும் 25 ஆண்டு காலத்துக்கு திராவிட இயக்கத்துக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இந்த ஆட்சிக்கும் ஏற்படாது. தமிழக மக்களுக்கும் எந்த குறைவும் ஏற்படாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>