மத்திய அரசு ஐடி சட்டத்தின் புதிய விதியின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தை அணுகலாம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ கொண்டு வந்தது. இதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேசன்,  பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்செய்தனர்.  அதில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி சுய ஒழுங்குமுறை நடைமுறை இருக்க வேண்டும். டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை, சம்பந்தப்பட்ட பப்ளிஷரின் விளக்கம் கேட்காமல் முடக்கம் செய்ய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது தன்னிச்சையானது.

எனவே செய்திகளை முடக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் பிரிவின் அடிப்படையில் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில்  இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அதேசமயம், இந்த விதியின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட்டால் மனுதாரர் சங்கம், இடைக்கால நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம். ஏற்கனவே இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: