பணி ஓய்வுக்கு 2 நாள் முன் காவலர் சஸ்பெண்ட் நீதிமன்ற உத்தரவின் பேரில் 18 ஆண்டுக்கு பிறகு ஓய்வு

பெரம்பூர்: சென்னை பாரிமுனை பகுதியில் வசித்து வந்தவர் நடேசன் (77). இவரது மனைவி மீனா. தம்பதிக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.  நடேசன் கடந்த 2003ம் ஆண்டு புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட எம்.கே.பி  நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது, இவரது மூத்த மகன் ராஜன் மலேசியாவிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்டாக செயல்பட்டு வந்துள்ளார். அவர் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் சிலர் புகார் கொடுத்ததாகவும், அதன்பேரில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து போலீசார்  நடேசன் வீட்டிற்கு வந்து விசாரித்துள்ளனர். அப்போது, நடேசன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட போலீசார் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பெரம்பலூர் மாவட்ட போலீசார், ராஜன் வழக்கில் நடேசன் மீதும்  சேர்த்து வழக்கு பதிந்துள்ளனர்.  இதனால், 30.6.2003 அன்று ஓய்வு பெற இருந்த நடேசன், 28.6.2003 அன்று  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  அதன் பிறகு பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கு தொடர்பாக 36 பேரிடம் விசாரிக்கப்பட்டு, நடேசன் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டது.

அதன் பிறகு, பெரம்பலூர் மாவட்ட போலீசார் மேல்முறையீட்டுகாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தினர். அங்கு கடந்த 2018ம் ஆண்டு வழக்கு முடிக்கப்பட்டு நடேசன் நிரபராதி என தீர்ப்பானது. அதன் பிறகு நீதிமன்ற நகல்களை எடுத்துக்கொண்டு நடேசன் அம்பத்தூர் இணை கமிஷனர் அலுவலகத்தில் சமர்ப்பித்தார். கடைசியாக எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்ததால் நடேசனின் கோப்புக்கள் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு அனுப்பப்பட்டது. அப்போது, வழக்கு காரணமாக 18 வருடங்களாக நடேசன் ஓய்வு பெறாமல் இருப்பதும், அவருக்கு சேர வேண்டிய பணப்பலன்கள் நிறுத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.  இதனையடுத்து உடனடியாக விசாரணை நடத்திய துணை கமிஷனர் 11.6.2021 அன்று நடேசன் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்று கூறி அவர் ஓய்வு பெற்றதாக சான்றிதழ் வழங்கினார். இதனையடுத்து, அவருக்கு வரவேண்டிய சலுகைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் சென்று சேரும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: