அரசுக்கும், முதல்வருக்கும் ஆலோசனை வழங்க முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைப்பு: தமிழக அரசு ஆணை வெளியீடு

சென்னை: அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட  ‘முதலமைச்சருக்கான பொருளாதார  ஆலோசனைக் குழு’வை அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று தாக்கத்தால் தமிழகத்தின் பொருளாதாரத்தில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை, அதிக அளவிலான கடன் ஆகியவை தொடர்ந்து ஆபத்தான நிலையை ஏற்படுத்திவருகிறது. அதே நேரத்தில் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொருளாதாரம், சமூக நீதி, சமநிலை ஆகியவற்றில் தமிழக அரசு விரைந்து வளர்ச்சியை எட்டிவிடும் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த வகையில், சர்வதேச அளவிலான பொருளாதார நிபுணர்கள், தமிழகத்தில் உள்ள பொருளாதார, சமூக, அரசியல் நிபுணர்களின் ஆலோசனை தமிழகத்திற்கு தேவையாக உள்ளது. எனவே,”முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு” ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் பேராசிரியர் எஸ்தர் டஃப்லோ (அமெரிக்காவின் மசாசூட் தொழில்நுட்ப மையத்தின் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி துறை), ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பேராசிரியர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் அர்விந்த் சுப்பிரமணியன், ராஞ்சி பல்கலைக்கழகத்தின் பொருளாதார வளர்ச்சி துறை கவுரவ பேராசிரியர் ஜீன் டிரெஸ், பிரதம மந்திரியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் மற்றும் தமிழக முன்னாள் செயலாளர் டாக்டர் எஸ்.நாராயண் ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.

இந்த குழு பொருளாதார, சமூக நீதி மற்றும் அரசியல் ஆகியவை குறித்த வழிகாட்டுதல்களையும், மனிதவள மேம்பாடு தொடர்பான விஷயங்களையும் குறிப்பாக பெண்கள் மற்றும் உரிமை குறைவான மக்களுக்கு சம வாய்ப்பு ஆகியவைகுறித்து ஆலோசனை வழங்கும்.

* பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல், வேலைவாய்ப்பு, மாநிலத்தின் உற்பத்தி திறன் ஆகியவை குறித்து அரசுக்கு கருத்துகளை தெரிவிக்கும்.

* மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி வளம் குறித்து அரசுக்கு வழிகாட்டுதல்களை தரும்.

* மக்களுக்கான சேவையை மேன்மைப்படுத்துவது குறித்து குழு ஆலோசனை வழங்கும்.

* விட்டுக்கொடுக்காததால் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புள்ள புதிய ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்.

* பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கைகள் மீது ஆய்வு செய்து முதலமைச்சர் அல்லது நிதி அமைச்சர் மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்கும்.

* இந்த குழு அடிக்கடி நேரடியாகவோ அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவோ கூடும்.

* குழுவின் செயல்பாடுகள் குறித்து அந்த குழுவே முடிவு செய்யும்.

* முதலமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையின் அடிப்படையில் முன்கூட்டியே ஆலோசனைகளை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரோ அல்லது நிதி அமைச்சரோ கோரிக்கை வைக்கும்போது தனிப்பட்ட உறுப்பினரோ அல்லது கவுன்சிலோ ஆலோசனைகளை வழங்க வேண்டும். குழுவின் முடிவுகள் கொள்கை அடிப்படையிலோ அல்லது வாய்மொழி ஆலோசனையாகவோ இருக்கும்.

* இந்த ஆலோசனைக் குழுவின் தலைமையகம் தமிழக நிதித்துறையாகும். தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் குழுவின் அமைப்பாளராக செயல்படுவார். ஆலோசனை குழு போக்குவரத்து, தங்குமிடம் ஆகியவற்றில் முதல்நிலை குழுவாக நடத்தப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் ரகுராம் ராஜன், டெல்லியில் பட்டப்படிப்பும், அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏவும் படித்தவர். உலக வங்கியின் மூத்த அதிகாரியாகப் பதவி வகித்தவர். 2008ம் ஆண்டு அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி வரப்போகிறது என்பதை முன்பே கண்டறிந்து சொன்னவர் இவர்தான். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2013ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2016ம் ஆண்டு செப்டம்பர் வரை பதவி வகித்தவர். 2003 முதல் 2006 வரை, சர்வதேச நாணய நிதியம் இயக்குநர் மற்றும் தலைமை பொருளாதார வல்லுநராக இருந்தார். கடந்த 2007-08ம் வருடம் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியையே சாமர்த்தியமாக சமாளித்து பல ஆலோசனைகளை வழங்கியவர். பண மதிப்பிழப்பு, சரியாக அமல்படுத்தப்படாத ஜிஎஸ்டி போன்றவை இந்திய பொருளாதாரத்தின் வேகத்தை குறைத்துவிட்டது என்று வெளிப்படையாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர். பொருளாதாரத்தில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்.

டாக்டர் அர்விந்த் சுப்பிரமணியன்

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், உலக வங்கியில் முக்கியமான பதவியை வகித்தவர். உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் குறித்து சொல்லி தருபவர். வளரும் நாடுகளின் பொருளாதாரம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருபவர். ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் கவர்னராக தேர்வான பின்பு, மன்மோகன் சிங்குக்கு முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன்.

பேராசிரியர் எஸ்தர் டஃப்லோ

அமெரிக்காவின் மாசாசுசெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி மையத்தின் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி துறையின் பேராசிரியர். பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். கடந்த 2019ல் பேராசிரியர்கள் அபித் பானர்ஜி, மைக்கேல் கிரிமர் ஆகியோருடன் இணைந்து பொருளாதார அறிவியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் சமூக அறிவியலில் ஆஸ்திரிய இளவரசி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மோசமான பொருளாதாரம் மற்றும் சர்வதேச ஏழ்மைக்கு எதிரான போராட்டம் என்ற புத்தகத்தை எழுதி பிஸ்னஸ் புத்தக விருதை 2011ல் வாங்கியுள்ளார். இந்த புத்தகம் 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கடினமான நேரத்தில் சிறந்த பொருளாதாரம் என்ற புத்தகத்தையும் இவர் வெளியிட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

ஜீன் டிரெஸ்

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜீன் டிரெஸ், இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இந்தியாவில் உள்ள ஸ்டாட்டிஸ்ட்டிக்கல் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்த துறையில் ஆர்வத்துடன் செயல்படுபவரான ஜீன் டிரெஸ், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென்னுடன் இணைந்து வறுமை ஒழிப்பு குறித்து புத்தகம் எழுதியவர். டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, பொருளாதார ஆய்வுக் குழு உறுப்பினராக இருந்தார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டுவந்து, கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க காரணமாக இருந்தவர் இவர்தான்.

டாக்டர் எஸ்.நாராயண்

சென்னையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.நாராயண் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. 1965 முதல் 2004ம் ஆண்டு வரை மாநில அளவிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் உயர்பதவி வகித்தவர். நிதி, தொழில் மற்றும் வர்த்தகத்துறை, எரிபொருள், விவசாயம், கப்பல் போக்குவரத்து, சாலைவசதி போன்ற பல்வேறு துறைகளில் தலைமை வகித்தவர். பல்வேறு அமைச்சரவையில் பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராக இருந்தவர்.

Related Stories: