நீட் தேர்வின் பாதிப்பு பற்றி இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்: ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் பேட்டி !

சென்னை: நீட் தேர்வின் பாதிப்பு பற்றி இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் 2-ம் கட்டமாக ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூகநீதியை நிலைநாட்டும் கடமை தமிழக அரசுக்கு எப்போதும் உண்டு.

எனவே நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை சரி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் இந்தக் குழு ஆய்வு செய்யும். இதன் மூலம் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பை அகற்ற தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தையும் இக்குழு கேட்க இருக்கிறது.  தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து neetimpact2021@gmail.com என்ற இணைய முகவரியில் கருத்து கூறலாம். வரும் 23ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்கலாம் என ஏ.கே. ராஜன் குழு அறிவித்துள்ளது.

நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது: நீட் தேர்வு பாதிப்பு குறித்த தகவலை தொடர்ந்து திரட்டி வருகிறோம். நீட் தேர்வின் பாதிப்பு பற்றி இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்த பின் எங்களது அறிக்கை இறுதி செய்யப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories: