சுடுமண் குழாயின் இணைப்பு கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.  கொரோனா பரவலால் நிறுத்தப்பட்ட அகழாய்வு பணிகள், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்விற்கு பிறகு சூடுபிடித்துள்ளது. கீழடி தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகள் என்பதால், தண்ணீரை கடத்த சுடுமண் இணைப்பு குழாய்களை பயன்படுத்தியுள்ளனர். தற்போது  கணேசன் என்பவரது நிலத்தில் நடந்த அகழாய்வின் போது இணைப்பு குழாயின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கும் நீளமான இணைப்பு குழாய் இருந்திருக்க  வாய்ப்புள்ளது. காலப்போக்கில் சிதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே கீழடியில் மேலும் இணைப்பு குழாய்கள் உள்ளனவா என ஆய்வு பணிகள் தொடர்கின்றன.

அகரத்தில் நடந்த அகழாய்வின் போது மீண்டும் உறை கிணறுகளின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. ஏற்கனவே அகரத்தில் நடந்த அகழாய்வின் போது ஆறு உறை கிணறுகள் கண்டறியப்பட்டன. இதுவரை ஆறு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அகழாய்வு நடந்து வரும் நான்கு தளங்களில் அகரம் தளம்தான் மிகவும் தாழ்வான பகுதி. இங்கிருந்த மண் மாதிரிகள் உத்தரப்பிரதேச பேராசிரியர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்விற்காக எடுத்து சென்றிருந்தனர்.  தற்போது மீண்டும் உறைகிணறுகளின் சிதைந்த பாகங்கள் கிடைத்திருப்பதால், மேலும் உறைகிணறுகள் இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அகரம் ஆற்றுப்படுகையாக இருந்திருக்கும் என்பதால் உறைகிணறுகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Related Stories:

>