முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் சென்னை அழைத்து வரப்பட்டார்: அடையாறு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த திட்டம்!

சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் சென்னை அழைத்து வரப்பட்டார். நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி (36). மலேசியா குடியுரிமை பெற்ற இவர், மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் வேலை செய்து வந்தார். 2017ம் ஆண்டு பரணி என்ற நண்பர் மூலம் அதிமுக அமைச்சரவையில் தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் உடன் அறிமுகம் நடிகைக்கு கிடைத்துள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

முதலில் அமைச்சரின் ஆசை வார்த்தையை ஏற்க மறுத்த நடிகை பிறகு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பிறகு பெசன்ட் நகர் மதுரிதா அப்பார்ட்மென்டில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் நடிகை சாந்தினி ஆகியோர் கணவன் மனைவி போல் வசித்து வந்துள்ளனர். அமைச்சர் மணிகண்டன் சென்னையில் இருக்கும் போது நடிகை வீட்டில் தான் தங்குவார். இதனால் நடிகை 3 முறை கருவுற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் மணிகண்டன் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அவரது நண்பர் டாக்டர் அருண் என்பவர் கோபாலபுரத்தில் நடத்தி வரும்  மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பல முறை நடிகை சாந்தினியை அடித்து உதைத்துள்ளார். அதன் பிறகு சாந்தினியை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதுகுறித்து நடிகை, அமைச்சர் மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ஒழுங்காக மலேசியாவிற்கே சென்று விடு.. இல்லையேல் ஒன்றாக இருக்கும் போது எடுக்கப்பட்ட நிர்வாண படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு இல்லாமல் மணிகண்டன் டெலிகிராம் மூலம் நடிகை குளியல் அறையில் நிர்வாணமாக குளித்த புகைப்படத்தை அவருக்கு அனுப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த நடிகை சாந்தினி சம்பவம் குறித்து உரிய ஆவணங்களுடன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்தார். இந்த புகாரின்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில் நடிகை சாந்தினியுடன் குடும்பம் நடத்தியதும் பின்னர் கொலை மிரட்டல் விடுத்ததும் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐபிசி 313, 323, 376, 417, 506(i) மற்றும் 67(ஏ) ஐடி ஆக்ட் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பினர். முன்னாள் அமைச்சர் என்பதால் சம்மன் குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் மணிகண்டன் பயன்படுத்தி வரும் 2 செல்போன் எண்ணிற்கும் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது இரண்டு செல்போன் எண்களும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்த தகவலை அறிந்த மணிகண்டன் தனது குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள வீடுகளில் மணிகண்டன் இல்லை. இதையடுத்து, மணிகண்டனை பிடிக்க சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் சென்னையில் இருந்து 2 தனிப்படையினர்  ராமநாதபுரத்திற்கு விரைந்தனர்.

இதனிடையே போலீசாரின் கைதில் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், கடந்த ஜூன் 9ம் தேதி வரை முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய தடைவிதித்து விசாரணையை தள்ளிவைத்தது. கடந்த 16ம் தேதி மணிகண்டன் மீதான ஜாமீன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பாலியல் வழக்கு என்பதால் முன் ஜாமீன் வழங்க முடியாது என கூறி அந்த மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதை அறிந்த மணிகண்டன் போலீசார் கைதிற்கு பயந்து மீண்டும் தலைமறைவானார்.

ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அடையார் துணை கமிஷனர் மேற்பார்வையில் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 2 தனிப்படையினரும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மணிகண்டனை தேடிவந்தனர். இதற்கிடையே, நண்பர்கள் உதவியுடன் அவர் பெங்களூரு தப்பி சென்றதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல்போன் சிக்னல் தீவிரமாக கண்காணித்து, மணிகண்டனை தனிப்படையினர் நெருங்கினர். அப்போது, பெங்களூரு எலட்க்ரானிக் சிட்டி அடுத்த கெப்பகோடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் மணிகண்டன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இன்று அதிகாலை தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் சென்னை அழைத்து வரப்பட்டார். அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீதிமன்றம் அல்லது நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி மணிகண்டன் சிறையில் அடைக்கப்படுவார். இதையடுத்து, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது. நடிகை அளித்த பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>