திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் மீட்பு

சென்னை: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதாகவும், முறைகேடாக தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும் கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சேஷாத்ரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், ஆளவந்தார் அறக்கட்டளை மற்றும் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து திருப்போரூர் சார்பதிவாளருக்கு உத்தரவிட்டது. மேலும், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களையும், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களையும் அளவீடு செய்து, அவை யார் பெயரில் பட்டா உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா, முறைகேடாக பத்திரப்பதிவு நடந்துள்ளதா என கண்டுபிடித்து அறிக்கை அளிக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.  

இதை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணி நடந்தது. தற்போது,, விவசாய நிலங்களை அளவீடு செய்யும் பணி நிறைவு பெற்று தற்போது கோயிலுக்கு சொந்தமான வீட்டு மனைகளை அளவீடு செய்யும் பணி நடக்கிறது. இதில், பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி புதுத்தெருவில் கோயிலுக்கு சொந்தமான புல எண் 104-1ல் அடங்கிய சுமார் 45 சென்ட் வீட்டு மனை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவனிதா, திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில், நேற்று முன்தினம் அந்த வீட்டுமனை கையகப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட 45 சென்ட் மனையின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.3 கோடி என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: