தமிழ்நாடு ஓட்டல் உணவு ஆன்லைனில் டெலிவரி தீவுத்திடலில் 365 நாளும் பொருட்காட்சி: சுற்றுலாத்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: சென்னை தீவுத்திடலில் உள்ள தமிழ்நாடு ஓட்டல், பயணவழி உணவகம் மற்றும் பொருட்காட்சி மைதானத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வுக்கு பிறகு அமைச்சர் மதிவேந்தன் அளித்த பேட்டி: தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு ஓட்டலில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமாகவும் சுவையாகவும் உள்ளது. இவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்ல ஏதுவாக ஸ்விகி, ஸ்மோட்டோ போன்றவற்றின் மூலமாக ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கும், தயாரிக்கப்படும் உணவு வகைகளை தெரிந்துகொள்ளவும் ஒரு அப்பிளிகேசன் உருவாக்கப்படும்.  

மேலும், தமிழ்நாடு ஓட்டலில் உள்ள அனைத்து பகுதிகளையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் உணவு அருந்துவதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். பொருட்காட்சி மைதானத்தில் உள்ள உணவகத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நுழைவாயிலில் பெரிய அளவில் எல்இடி திரை அமைக்கப்படும். பொருட்காட்சி மைதானத்தில் 365 நாட்களும் பொருட்காட்சி மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்தி அதன்மூலம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொருட்காட்சி மைதானத்தில் உள்ள இரண்டு மைதானத்திற்கும் பொதுமக்கள் சென்று பார்வையிட்டு பயன்பெறும் வகையில் கூவம் நதிக்கரையின் நடுவில் ஒரு நிரந்தர பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: