பல்வேறு காரணங்களால் 2016ம் ஆண்டில் இருந்து தடைபட்ட வேளச்சேரி-பெருங்குடி ரயில்வே சாலை பணி மீண்டும் துவக்கம்: பருவமழைக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை

சென்னை: பல்வேறு காரணங்களால் 2016ம் ஆண்டில் இருந்து தடைபட்ட வேளச்சேரி - பெருங்குடி ரயில்வே சாலை பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இந்தப்பணிகளை பருவமழைக்குள் விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். வேளச்சேரி - பெருங்குடி ரயில் நிலையம் இடையே, ரயில் தண்டவாளம் அருகில், 3.5 கி.மீ துாரத்தில் 80 அடி உள்வட்ட சாலை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சாலையால் வேளச்சேரி, பெருங்குடி சுற்றுவட்டார மக்கள் ரயில் நிலையத்தை எளிதில் அடைய முடியும். அதோடு, ஆதம்பாக்கம், வேளச்சேரி, உள்ளகரம், மடிப்பாக்கம் பகுதி மக்கள் துரித பயணமாக பெருங்குடி, தரமணி செல்ல முடியும். கடந்த 5 ஆண்டுக்கு முன் இந்த சாலை அமைக்கும் பணி துவங்கியது.

வேளச்சேரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், பெருங்குடி சதுப்பு நிலத்தை அடையும் வகையில், இந்த சாலையின் குறுக்கே, 120 அடி அகல, நீர்வழிப்பாதை உள்ளது. இந்த இடம் போக மீதமுள்ள தூரத்தில் 2016ல் சாலை மற்றும் வடிகால் அமைக்கப்பட்டது. நீர்வழி பாதையில் தரைப்பாலம் அமைத்து, சாலையை இணைக்க 2018ல் ரயில்வே நிர்வாகம் ரூ.4 கோடி நிதி ஒதுக்கியதையடுத்து பணி துவங்கப்பட்டது. இதற்கிடையில் நிர்வாக குளறுபடியால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 2019ம் ஆண்டு ரூ.4.50 கோடியில் மற்றொரு ஒப்பந்த நிறுவனம் பணி எடுத்தது அந்த நிறுவனம் பணியை ஆரம்பித்த போது, பருவ மழை துவங்கியதால் பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 2020ம் ஆண்டு ஜனவரியில் பணிகள் மீண்டும் துவங்கியது. அதன்பிறகு கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றின் முதல் அலையை  பரவத் தொடங்கியதையடுத்து அந்த பணிகளும் இரண்டே மாதத்தில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அக்டோபரில் நீர்வழி பாதையில் மண் கொட்டி பணி துவக்கப்பட்டது. ஆனால் பருவ மழை துவங்கியதையடுத்து மாநகராட்சி அளித்த கடிதத்தின் காரணமாக தரைப்பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஜனவரி மாதத்தில் பணிகள் மீண்டும் துவங்கிய நிலையில் கொரோனா இரண்டாவது அலையால் மீண்டும் தடை ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் தரைப்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. இதையடுத்து பல்வேறு காரணங்களால் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் மீண்டும் பருவமழை தொடங்குவதற்குள் பணிகள்  முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பணிகளும் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.  இனிமேல் எந்த இடையூறும் இல்லாமல் பணி நடந்தால் வரும் பருவமழைக்கு முன் பணி முடியும் அதற்கு ஏற்ப பணியை வேகப்படுத்தி உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: