உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா ஓய்வு: நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக குறைந்தது

சென்னை:  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் மகன் நீதிபதி ஆர்.சுப்பையா. திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் கிராமத்தை சேர்ந்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்து 1983ல் தமிழ்நாடு பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். 2008 மார்ச் 24ல் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்ற இவர், 2009 நவம்பரில் நிரந்தர நீதிபதியாக பொறுப்பேற்றார்.   இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் அரசு ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது. ஒவ்வொரு பள்ளியும் பலவீனமான பிரிவு மாணவர்களுக்கு இலவச கல்விக்காக மொத்த இடங்களில் 25 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியவர். இவர் வரும் 21ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

 இதையடுத்து, நீதிபதி ஆர்.சுப்பையாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவுபசார விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மூத்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்துகொண்டனர். பல நீதிபதிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் வாழ்த்தி பேசினார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த ஒதுக்கீடு எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 60 நீதிபதிகள் பதவியில் உள்ளனர். நீதிபதி ஆர்.சுப்பையா ஓய்வு பெறுவதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக

குறைந்துள்ளது.

Related Stories: