கும்மிடிப்பூண்டி அருகே டயர் தொழிற்சாலையில் தீ விபத்து: ரூ20 லட்சம் சேதம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகையில் உள்ள  பழைய டயர்களை அறுத்து, மீண்டும் புதிய டயர்களாக (ரீ-டிரேடிங்) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் டயர் உற்பத்தி பிரிவில் திடீரென தீ பிடித்தது. பழைய டயர்கள் போட்டு வைத்திருந்த பகுதிக்கு தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதை பார்த்ததும் ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.

தேர்வாய்கண்டிகை சிப்காட் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு படையினர்  சுமார் 4 மணி நேரமாக டயர்களில் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

இந்த டயர் தொழிற்சாலையை ஒட்டி சிலிண்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளதால், அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பாதிரிவேடு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு வளையத்துக்குள் நின்றபடி, சிலிண்டர் உற்பத்தி தொழிற்சாலைக்கு தீ பரவாதபடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகாலை டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: