சேதமடைந்து காணப்படுகிறது பஞ்சாயத்து ஆபீஸ் சீரமைக்கப்படுமா?

திருமங்கலம்: கள்ளிக்குடி அருகேயுள்ள அரசபட்டி பஞ்சாயத்து அலுவலகம் சிதைவடைந்து மழைக்கு ஒழுகி வருவதால் அலுவலக பணிகள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டது டி.அரசபட்டி கிராமம். இந்த கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் சரிவர பராமரிப்பு பணி செய்யாததால் தற்போது பஞ்சாயத்து அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்காலங்களில் அலுவலகத்தின் பெருபாலான பகுதிகளில் ஒழுகுவதால் ஆவணங்களை பராமரிப்பதில் கடும் சிரமங்கள் உண்டாகின்றன. பஞ்சாயத்து கூட்டங்கள் நடத்த கூட அலுவலகத்தில் சரிவர இடம் இல்லாமல் பஞ்சாயத்து நிர்வாகம் திணறிவருகிறது.

இது குறித்து பஞ்சாயத்து தலைவர் சுந்தரபாண்டியிடம் கேட்ட போது, ‘‘நான் கடந்த பஞ்சாயத்துதேர்தலில் வெற்றிபெற்று தலைவராகியுள்ளேன். இந்த அலுவலகம் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பொதுபணித்துறையினர் பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. நாங்கள் பதவியேற்றதும் சிதைவடைந்து காணப்படும் பஞ்சாயத்து அலுவலகம் குறித்து கள்ளிக்குடி ஒன்றிய அதிகாரிகளிடம் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளேன். சேதமடைந்துள்ள கட்டிடம் என்பதால் தலைவர் என்ற முறையில் எனது பெயர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பெயர்களை கூட பஞ்சாயத்து அலுவலகத்தில் எழுத முடியவில்லை. பராமரிப்பு பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்திரவிட வேண்டும்’’ என்றார்.

Related Stories: