சுமார் 152 கி.மீ.தூரம் பயணித்து கிருஷ்ணா நீர் ஜீரோ பாயிண்ட் வந்தது: அமைச்சர், எம்எல்ஏக்கள் மலர்தூவினர்

ஊத்துக்கோட்டை: ஆந்திராவில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள கிருஷ்ணா நீர், இன்று காலை ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்தடைந்தது. அமைச்சர், எம்எல்ஏக்கள் ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தமிழக-ஆந்திரா இடையே நதிநீர் ஒப்பந்தத்தின்படி ஆண்டு தோறும் தமிழகத்துக்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் இதில் 3 டிஎம்.சி சேதாரம் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். கடந்த தவணை காலத்தில் 7.6 டிஎம்சி மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்தது. நிலுவையில் உள்ள 4.4 டிஎம்சி கிருஷ்ணா நீரை பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீர்வளத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர்.  ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டார்.

‘’கண்டலேறு அணையில் 45 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.  தெலுங்கு-கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடலாம்’ என்று தெரிவித்தனர். தமிழக  அரசின் கோரிக்கை தொடர்பாக ஆந்திர அரசிடம் அங்குள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கடந்த 14ம் தேதி காலை 9மணியளவில் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக 2100 கன அடியாக உயர்த்தப்பட்டது. இந்த தண்ணீர் சுமார் 152 கிலோ மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு இன்று காலை  வந்தடைந்தது.

இந்த தண்ணீரை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஜெயக்குமார் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், திருத்தணி எஸ்.சந்திரன், காரம்பாக்கம் கணபதி மற்றும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர்.‘’ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்துள்ள தண்ணீர் சில நாட்களில் பூண்டி ஏரியை வந்தடைந்ததும் அங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: