ஸ்டான்லி நகர், கல்யாணபுரம் பகுதிகளில் 490 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட உட்வார்ப் சாலை, 53, 54 மற்றும் 57வது வார்டுக்குட்பட்ட ஸ்டான்லி நகர் மற்றும் கல்யாணபுரம் குடியிருப்பு பகுதிகளில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கடந்த 7ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள திடக்கழிவை அகற்றவும், பராமரிப்பின்றி இருந்த பொதுக் கழிப்பறைகளை விரைந்து புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று ஸ்டான்லி நகர், கல்யாணபுரம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக இந்த குடியிருப்பு பகுதிகளில் அமைச்சரின் உத்தரவின்பேரில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மை பணியின் கீழ் சுமார் 490 மெட்ரிக் டன் குப்பை, கட்டிட கழிவு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் படர்ந்திருந்த 334 மெட்ரிக் டன் ஆகாய தாமரை அகற்றப்பட்டன. மேலும் 54வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு பராமரிப்பின்றி இருந்த பொதுக்கழிவறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

57வது வார்டில் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய பொது கழிப்பறையை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இப்பகுதிகளில் தொடர்ந்து தூய்மை பணிகளை மேற்கொள்ளவும், பொது கழிவறைகளை நாள்தோறும் தூய்மையாக பராமரிக்கவும் உத்தரவிட்டார். பின்னர், ராயபுரம் மண்டலம் 59வது வார்டுக்கு உட்பட்ட சத்தியவாணி முத்து நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி குழந்தைகள் மையம், தொடக்கப்பள்ளி, சமுதாயக்கூடம் மற்றும் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கழிவறைகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, பராமரிப்பின்றி இருந்த குழந்தைகளுக்கான கழிவறைகள் மற்றும் குழந்தைகளுக்கு என அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்காவை உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது.  வடக்கு வட்டார துணை ஆணையர் ஆகாஷ், மண்டல அலுவலர் தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர்கள்  உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: