ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்: விவசாயிகள் எச்சரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று விவசாய சங்க தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2017 பிப்ரவரி 15ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2019ல் அப்போதைய தமிழக அரசு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. இதனால் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே கருக்காகுறிச்சி வடதெருவில் 463 சதுர கிலோ மீட்டருக்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை கடந்த 10ம் தேதி வெளியிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடதெரு அருகே கோட்டைக்காடு பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் 20 ஆண்டுகளுக்கு முன் சோதனைக்காக போடப்பட்டுள்ள எண்ணெய் கிணறு பிளான்ட் மீது ஏறி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு தமிழக விவசாய சங்க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளார் பிஆர்.பாண்டியன் கூறுகையில், வடதெரு கிராமத்தை மையமாக வைத்து ராமநாதபுரம் கடற்பகுதி வரை ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான தொகுப்பு ஒப்பந்தத்தை ஒற்றைசாளர முறையில் கோரப்பட்டுள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எரிவாயு, நிலக்கரி, கச்சா, நிலவாயு உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நிறுவனம் எடுத்து கொள்வதற்கு முழு அதிகாரம் வழங்கும் அடிப்படையில் ஒப்பந்தம் வழிவகிக்கிறது.

மத்திய அரசு திட்டமிட்டு பன்னாட்டு நிறுவனங்களோடு டெல்டா விவசாயிகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதை கண்டிக்கிறோம். போராட்ட களத்திற்கு மத்திய அரசே விவசாயிகளை தள்ளுகிறது என்றார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், கூட்டாட்சி தத்துவத்தை மீறி மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசு சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறது. வட தெருவில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிப்பை மத்திய அரசு நிறுத்த வேண்டும். தமிழக முதல்வரின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் விவசாயிகள் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார். இந்திய கம்யூனிஸ்டு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் தனபதி கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை ஒழிக்க மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவார்கள் என்றார்.

Related Stories: