திருப்பதிக்கு நெய் அனுப்பியதாக கணக்கு காட்டி கோடிக்கணக்கில் சுருட்டல் புகார் மதுரை ஆவின் மாஜி பெண் அதிகாரி விசாரணைக்கு ஆஜராகாமல் எஸ்கேப்: ரூ.13.71 கோடி மோசடி புகாரில் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

மதுரை: மதுரை ஆவினில் பால், நெய், வெண்ணெய் உள்ளிட்ட உபபொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதில், கடந்தாண்டு ஏப்ரல் முதல், இவ்வாண்டு மார்ச் வரை, நெய், வெண்ணெய் உற்பத்தியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக ஆவின் நிர்வாக இயக்குநருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பொதுமேலாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில் ரூ.13.71 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடித்தனர். இதனை உறுதிசெய்வதற்காக சென்னை ஆவின் துணைப்பதிவாளர் அலெக்ஸ் தலைமையிலான குழுவினர் தணிக்கையில் ஈடுபட்டனர். அதில், ரூ.13.71 கோடி முறைகேடு நடந்துள்ளதை அவரும் உறுதி செய்தார். இதுதொடர்பாக உதவி பொதுமேலாளர்கள் கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன், துணை மேலாளர் வனிதா, மாயகிருஷ்ணன் ஆகிய 5 பேரை சஸ்பெண்ட் செய்து ஆவின் இயக்குநர் நந்தகோபால் உத்தரவிட்டார்.

இந்த விசாரணையில், ஆவணங்களில் திருத்தம், பில்கள் மோசடி என பல நுணுக்கமான மோசடிகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கியமாக மதுரை ஆவினில் இருந்து திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க 2 டன் நெய் அனுப்ப அனுமதி பெறப்பட்டது. இதற்காக கடந்தாண்டு பிப். 4ம் தேதி 7,500 கிலோவும், பிப். 15ம் தேதி 15 ஆயிரம் கிலோ நெய் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1.10 கோடி. ஆனால் தணிக்கையில் இத்தகவல் இல்லை. திருப்பதி கோயில் பெயரில் 22 ஆயிரம் கிலோ நெய் அனுப்பி, அதை வெளிமார்க்கெட்டில் கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதுபோல் பல மோசடிகளை கண்டுபிடித்தனர்.

இந்த மோசடி நடைபெற்ற காலத்தில் மதுரை ஆவினில் பொதுமேலாளராக பெண் அதிகாரி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் தற்போது தென்காசி மாவட்ட அதிகாரியாக உள்ளார். கொரோனா தொற்று என காரணம் கூறி, விசாரணை அதிகாரி முன் ஆஜராகாமல் பெண் அதிகாரி தப்பித்து வருகிறார்.  இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பெண் அதிகாரி ஏதோ காரணத்தை கூறி தப்பி வருகிறார். இதனால் பெண் அதிகாரி மீதான விசாரணை நீர்த்துப்போகும். சம்பந்தப்பட்ட வர்களிடம் இருந்து  இழப்பீடை பெற வேண்டும்’’’ என்றனர். திருப்பதி கோயில் பெயரில் 22 ஆயிரம் கிலோ நெய் அனுப்பி, அதை வெளிமார்க்கெட்டில் கொள்ளை லாபத்  திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>