முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டு சிங்கார சென்னை 2.0 மெகா திட்டம் விரைவில் தொடங்கப்படும்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சிங்கார சென்னை 2.0 மெகா திட்டம் குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச நகரங்கள் இருப்பது போல சென்னையை வண்ணமயமாக மாற்றவும், சாலைகளை சுத்தமாக்குவதோடு, உலக தரத்திற்கு மாற்றவும் திட்டங்கள் வகுக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.  அதன்படி, ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ திட்டப்படி, கடலோர பகுதிகள் அழகுபடுத்தப்படும். இந்நிலையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் முதல் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்  பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள 99 ரவுண்டானா மேம்பாடு, அண்ணா பூங்கா முழுவதும் மறு சீரமைப்பு, மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகில் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை, பழமை மாறாமல் விக்டோரியா மண்டபம் மறு சீரமைப்பு இதற்காக சிறப்பு வல்லுனர்களை கொண்ட குழு மூலம் திட்ட அறிக்கை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் கன்டெய்னர் வடிவில் உள்ள கழிவறைகளை அமைக்கும் திட்டம், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 230 பள்ளிகளையும் சீரமைப்பு, ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம், அனைத்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மன நல மருத்துவ பிரிவு, அனைத்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு பேரிடர் மற்றும் கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கு சேவைகளும் அளிக்கும் வகையில் அனைத்து பிரிவுகளும் கொண்ட கால் சென்டராக 1913 திட்டத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவொற்றியூர், நீலாங்கரை கடற்கரைக்கு திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. மெரினா கடற்கரைக்கு தயார் செய்ய வேண்டும். மேலும்  சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பது குறித்து அறிக்கையாக தயார் செய்து முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டு திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Related Stories:

>