நெடுவாசல் அருகே ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசின் ஏலத்திற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசின் ஏலத்திற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நெடுவாசல் அருகேயுள்ள கர்காகுறிச்சி வடதெரு பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒன்றிய அரசின் பெட்ரோலிய துறை ஏல அறிவிப்பை கடந்த 10ஆம் தேதி அறிவித்தது. இது அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய பெட்ரோலிய துறை முயன்றபோது தொடர்ந்து 21 நாட்களும் அதன்பிறகு 200 நாட்களும் தொடர்ச்சியாக நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த போராட்டத்தின் விளைவாக அந்த திட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தவொரு திட்டத்திற்கும் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்க காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைத்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.

இந்நிலையில் விவசாயிகள் அந்த பகுதியில் எந்தவொரு விவசாயத்தை பால்படுத்தும் திட்டமும் நிறைவேற்றப்படாது என்று நிம்மதி பெருமூச்சு விட்டிருந்த நிலையில் தற்போது ஒன்றிய அரசின் பெட்ரோலியத்துறை மீண்டும் 463 சதுர கிலோ மீட்டருக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பை விடுத்துள்ளது. இது அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>