பட்டதாரி பெண் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புழல் பகுதியை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி பெண் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் தேஜ்பால் சிங்.  இவரது மகள் காயத்ரி, எம்பிஏ பட்டதாரி. இவர், விக்ரம் சர்மா என்பவருக்கு சொந்தமான ஏகேஎஸ் அலாய்ஸ் என்ற நிறுவனத்தில் 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஞானபாபா நிறுவனத்தில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20ம் தேதி தேஜ்பால் சிங்கை செல்போனில் அழைத்த விக்ரம் சர்மா, அலுவலக மின்விசிறியில் காயத்ரி  தூக்கிட்டு தற்கொலை செய்ததை பார்த்ததாக தெரிவித்தார். இதையடுத்து தனது மகனுடன் அலுவலகத்திற்கு சென்றபோது, காயத்ரியின் உடல் தரையில் கிடத்தி இருந்தது.

பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், காயத்ரியின்  உடற்கூறு ஆய்வு நடந்துள்ளது. இதற்கிடையே, காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக புழல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், தனது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனக்கோரியும் தேஜ்பால் சிங் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சாத்தி குமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கு ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:  வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ஞானபாபா நிறுவனத்தை சம்பவம் நடந்த அன்றுதான் காயத்ரி பெயரில் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் உரிய சாட்சிகளை சேர்க்கவில்லை. இறந்துபோன காயத்ரியின் தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரிடம் விசாரிக்கப்படவில்லை.

தடய அறிவியல் சோதனை முடிவுகள் இதுவரை வரவில்லை. உடற்கூறு ஆய்வு முடிவில் கழுத்து எலும்பு முறியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. தூக்கிட்டு தற்கொலை செய்தால் மரண போராட்டத்தின்போது கழுத்து எலும்பில் பாதிப்பு ஏற்படும். அதுவும் இல்லை. காயத்ரியின் செல்போன் மற்றும் லேப்டாப் தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தடய அறிவியல் ஆய்வு முடிவுகள் வந்தால்தான் மரணத்தின் உண்மை காரணம் தெரியவரும். எனவே, போலீஸ் தரப்பில் தற்கொலை என்று கூறுவதை ஏற்க முடியாது. விக்ரம் சர்மா சம்பவம் நடந்த இடத்தில் ஏற்கனவே இருந்துள்ளார். இதில் சந்தேகம் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் சர்மா முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தியதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் தனது மகளின் மரணம் குறித்து சந்தேகம் கொள்வதற்கான காரணங்கள் உள்ளன.

போலீசாரின் விசாரணையில் நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை.  எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது. அனுபவம் உள்ள ஒரு அதிகாரியை விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி நியமிக்க வேண்டும். விசாரணையை சிபிசிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>