கோயில்களில் பெண்களுக்கு அர்ச்சகராகும் வாய்ப்பு: தமிழில் அர்ச்சனை : அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை துறை அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் துணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்த கொண்டனர். மேலும் திட்டம், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டி: திமுக பதவி ஏற்ற நாளில் இருந்து, வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். இதனை பக்தர்கள் தெரிந்த கொள்ளும் வகையில் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்படும். அதில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர், செல்போன் எண்கள் அறிவிப்பு பலகையில் இடம் பெயரும். எந்த கோயில்களில் அர்ச்சகர் பற்றாக்குறை உள்ளதோ? அங்கு தேவையான அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவர். அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்கிற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும். கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு அதற்கான பயிற்சி வழங்கப்படும்.

 அவர்கள் அர்ச்சகர்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 30 கோயில்களில் உள்ள யானைகளை பாதுகாக்க மருத்துவர்கள் அடங்கிய இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் குழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மதம் சார்ந்த விஷயங்களில் யாருடைய மனமும் புண்படக்கூடாது என்று முதல்வர் கூறியுள்ளார். ஜீயர்கள் நியமனம், கண்டிப்பாக இதற்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட நடைமுறையில் தேர்வு செய்யப்படுவார்கள். சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படும்

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி .கே. எம். காலனி  வண்ணான்குட்டை என்ற இடத்தில் 1.2 ஏக்கர்  நிலம், பூம்புகார் நகரிலுள்ள சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கரை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். அதனை நேற்று மாலை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு  மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டு வரப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

Related Stories: