தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் இயற்கை மருத்துவ படிப்பில் சேர தகுதியில்லை என்ற விதிக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி தேர்வுக்குழு கொள்கை விளக்க குறிப்பேட்டை வெளியிட்டது. அதில், தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படிப்புக்கு விண்ணப்பித்து கோவை தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி வீரலட்சுமியிடம் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திடம் இருந்து தகுதிச்சான்று பெற்று சமர்ப்பிக்கும்படி அந்த கல்லூரி தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொள்கை விளக்க குறிப்பேட்டில், தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள், இப்படிப்பில் சேர தகுதியில்லை என்று தெரிவித்துள்ளதால் பல்கலைக்கழகம் தகுதிச் சான்று தராது என்று கூறி சம்பந்தப்பட்ட விதியை செல்லாது என்று அறிவிக்க கோரி வீரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், 2019-20ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் போது, இதுபோன்ற விதி கொண்டு வரப்பட்ட போது அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விதியை ரத்து செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதியில்லை என்ற கொள்கை விளக்க குறிப்பேடு விதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என இந்திய மருத்துவம் மற்றும் ேஹாமியோபதி தேர்வு குழு கொள்கை குறிப்பேடு வெளியிட்டது.

Related Stories: