கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கு ஆக.2ல் நேர்காணல் தொடக்கம்: 2021ம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு செப்.22 நடக்கிறது

சென்னை: கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட ஐஏஎஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான நேர்காணல் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என்று யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. மேலும் இந்தாண்டுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 22ம் தேதி நடக்கிறது.  மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2020ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 796 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. சுமார் 4.5 லட்சம் பேர் முதல் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி நடந்தது. முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் சுமார் 10,564 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 603 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு இந்தாண்டு ஜனவரி மாதம் 5 நாட்கள் நடந்தது.

இந்த நிலையில் இவர்களுக்கான நேர்காணல் தேர்வு கடந்த ஏப்ரல் 26ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவலை அடுத்து இந்த தேர்வு நடைபெறவில்லை. தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நேர்காணல் தேதியை யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி இயக்குனர் வைஷ்ணவி கூறியதாவது: கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 2020ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நேர்காணலை நடத்த யுபிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இத்தேர்வு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்க உள்ளது. தொடர்ந்து நேர்காணல் செப்டம்பர் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேர்காணல் தேர்வுக்கான அழைப்பு கடிதம் விரைவில் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். www.upsc.gov.in, www.upsconline.nic.inல் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

நேர்காணல் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அவர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். யாருக்கு என்ன பதவி என்பது குறித்து அதன் பிறகு தெரிய வரும். பதவிகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படும். இந்தாண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் உள்ள 712 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இவ்வாறு வைஷ்ணவி கூறினார்.

Related Stories: