போலீசார் அனுமதி வழங்கியதை தொடர்ந்து சென்னையில் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

* எதிர்க்கட்சி துணை தலைவர், கொறடா தேர்வு நடக்கிறது

* கட்சி அலுவலகத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வர தடை

சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் 14ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் மற்றும் கொறடா தேர்வு செய்யப்பட உள்ளனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அன்றைய தினம் தலைமை அலுவலகத்திற்கு வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வருகின்ற 14ம் தேதி (திங்கள்) மதியம் 12 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், எம்எல்ஏ ஐடி கார்டு உடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். 14ம் தேதி தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற இருப்பதால், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அன்றைய தினம் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தலைமை அலுவலகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதிமுக தலைமை அலுவலக வளாகத்திற்குள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் வருகிற 14ம் தேதி நடத்துவதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் சென்னையில், டிஜிபியிடம் மனு அளித்திருந்தார். போலீசார் அனுமதி அளித்ததை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் மற்றும் அதிமுக கொறடா, துணை கொறடா உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: