தொழிலாளர் ஆணையரின் தீர்ப்பை அமல்படுத்தாத கலெக்டர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த பார்வதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், எனது மகள் சங்கீதா ஒரு நிறுவனத்தில் பணியாற்றியபோது மரணமடைந்துவிட்டார். இது தொடர்பாக இழப்பீடு கோரிய மனுவை விசாரித்த சென்னை தொழிலாளர் ஆணையர் இழப்பீடு வழங்க 2005ல் உத்தரவிட்டார்.  ஆனால், அந்த உத்தரவை கிருஷ்ணகிரி கலெக்டர் மற்றும் கிருஷ்ணகிரி தாசில்தார் அமல்படுத்தவில்லை என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘‘மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பை தொடர உரிமை உள்ளது. தொழிலாளர் ஆணையரின் உத்தரவை அமல்படுத்தாதது குறித்த ஆதாரம் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, தொழிலாளர் ஆணையரின் உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு சார்ஜ் மெமோ தரப்பட வேண்டும். அந்த சார்ஜ் ெமமோ அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மீது தினமும் விசாரணை என்ற முறையில் துறைரீதியாக விசாரணை நடத்த வேண்டும். பணியாளர் இழப்பீடு சட்டம் மற்றும் பணிக்கொடை வழங்குதல் சட்டத்தின்கீழ் நிவாரணம் கோரி வரும் பணியாளர்களின் கோரிக்கைகளை கிடப்பில் போடாமல் உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டார்.

Related Stories: