கொரோனா பாதிப்பு நிவாரணம் 2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் பெற இன்று முதல் டோக்கன் விநியோகம்: 2.10 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்

* ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 பேர் வரை நிவாரணம், மளிகை பொருட்கள் வாங்க டோக்கன் வழங்கப்படும்.

*டோக்கனில் எந்த தேதி, எந்த நேரத்தில் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வர வேண்டும் என்று எழுதி கொடுக்கப்படும்.

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக 2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்களுக்கான டோக்கனை  ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று வழங்க உள்ளனர். இதன்மூலம் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் நடந்த  சட்டமன்ற தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், கொரோனாவால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் பிறந்த நாளில் 4000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின்  உறுதியளித்திருந்தார். அதன் அடிப்படையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், கொரோனா நிவாரண தொகைக்கான முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை கடந்த மே மாதம் 10ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அதன் தொடர்ச்சியாக, தற்போது ஜூன் மாதத்தில் 4196.38 கோடி செலவில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகைக்கான இரண்டாவது தவணை 2000 வழங்கும் திட்டத்தை கலைஞர் பிறந்த நாளான கடந்த 3ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு  ரூ.844.51 கோடி செலவில், 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை வழங்கும் திட்டத்தையும் கடந்த 3ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை தொகை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருள் தொகுப்பினை வருகிற 15ம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இன்று (11ம் தேதி) முதல் 14ம் தேதி வரை ரேஷன் கடை பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 200 பேர் வரை ரேஷன் கடைகளுக்கு வந்து கொரோனா நிவாரண தொகை மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வாங்கிச் செல்லும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்படும். டோக்கனில் எந்த தேதி, நேரத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க வர வேண்டும் என்று எழுதி கொடுக்கப்படும். டோக்கன் கிடைக்காதவர்கள், வெளியூர் சென்றுள்ளவர்கள் இந்த மாத இறுதி வரை தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண பொருட்களை ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: