காவிரி நீர் திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்காக மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி பயணம்: 12ம் தேதி மேட்டூர் அணையை பார்வையிடுகிறார்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சிக்கு செல்கிறார். அடுத்த நாள் சேலம் சென்று மேட்டூர் அணையை பார்வையிடுகிறார். தமிழக முதல்வராக பதவி ஏற்ற பிறகு கொரோனா தொற்றை தடுப்பதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை, மருத்துவமனைக்கு சென்று பார்வையிடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார். சென்னை மட்டுமல்லாது சேலம், கோவை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கும் சென்று கொரோனா தடுப்பு பணிகள் மற்றம் சிகிச்சைகளை ஆய்வு செய்தார். பின்னர் திருச்சிக்கும் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9.30 மணிக்கு விமானத்தில் திருச்சி செல்கிறார்.

அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் வரவேற்கின்றனர். அதன் பின்னர் கல்லணைக்கு காலை 10.15 மணிக்கு சென்று ஆய்வு செய்கிறார். கல்லணை உடைந்த பகுதியையும் பார்வையிடுகிறார். 10.30 மணிக்கு கல்லணையில் நடைபெறும் பணிகள் மற்றும் காவிரி நீர் பயன்பாடு குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் மாலையில் விமானம் மூலம் சேலம் செல்கிறார். அங்கு இரவு தங்குகிறார். நாளை மறுநாள் (12ம் தேதி) காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை பார்வையிடுகிறார். பின்னர் 10.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுகிறார். அந்த நிகழ்ச்சிகள் முடித்த பிறகு சென்னை திரும்புகிறார்.

Related Stories: