காசிமேடு, திருவொற்றியூரில் ஆய்வு மீனவர்களின் நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்படும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி

தண்டையார்பேட்டை: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடித் துறைமுகங்களை நேற்று ஆய்வு செய்தார். அப்போது, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள மீனவ சங்க பிரதிநிதிகள் சந்தித்து அங்கு உள்ள குறைகளை கேட்டறிந்தார். அப்போது சாலைகள் மிக மோசமாக உள்ளதாக ஒரு சிலர் குறிப்பிட்டனர். இதுகுறித்து, அமைச்சர், அதிகாரிகளிடம் கேட்டபோது காசிமேடு மீன்பிடி துறைமுகம் சென்னை துறைமுகத்தில் உள்ளதால் அவர்கள் அனுமதியுடன்தான் பணிகள் செய்ய முடியும் என குறிப்பிட்டனர். மேலும், இதற்கு மீனவர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் அமைச்சரிடம் கொடுத்தனர். அதன்பின் திருவொற்றியூர் ஓண்டிகுப்பத்தில் ரூ.200 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடித் துறைமுகத்தை ஆய்வு செய்தார். அப்போது, 60 சதவீத பணிகள் முடிந்து உள்ளதாகவும், மீதம் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மீனவர்களின் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிய ஆய்வு மேற்கொண்டிருக்கிறேன். அதனடிப்படையில்  காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு பைபர் படகு சங்க பிரதிநிதிகளை  சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெறப்பட்டுள்ளது. அவர்களின் நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்படும். வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மீனவர்களுக்கு பல்வேறு வகையான திட்டங்கள் அறிவிக்கப்படும். மீனவர்களின்  நலன் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. 20 நாட்களுக்கு மேல்  காணாமல் போன மீனவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 ஆயிரம் வழங்கிய முதல் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார்,” இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆய்வின்போது, அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடசென்னை எம்.பி.கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதாவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், கே.பி.சங்கர், மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் சர்ஜன் சிங், ஜெயகாந்தன், ராஜூ, திமுக மாவட்டச் செயலாளர் இளைய அருணா, மீனவர் அணி செயலாளர் ஆர்.பத்மநாபன், மருது கணேஷ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: