நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றி சென்னையை தூய்மையாக்க தீவிர தூய்மை பணி திட்டம்: குப்பை அகற்றும் பணியில் 2 ஆயிரம் ஊழியர்கள்; மாநகராட்சி தீவிர நடவடிக்கை

சென்னை:  நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றி சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் மாநகராட்சிஅதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதை பயன்படுத்திக் கொண்டு சென்னையை சுத்தம் செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. முக்கியமாக சென்னையில் அதிக குப்பை கூளங்கள் இருக்கும் பகுதிகளை பார்த்து சுத்தம் செய்து வருகின்றனர். கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கானது 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு நாட்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக இருப்பதாலும், போக்குவரத்து இடையூறு இல்லாத காரணத்தினாலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் உள்ள பகுதிகளில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றி சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் தீவிர தூய்மைப் பணி திட்டம் கடந்த 27ம் தேதி முதல் துவங்கப்பட்டு தொடர்ந்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக சென்னையில் குப்பைகள் அதிகம் ஆகி சாக்கடைகள் தூர்வாரப்படாமலும், பல தெருக்கள் நாற்றம் அடிக்கும் அளவிற்கு மோசனமான நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகையும் சென்னையில் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளை சுத்தம் செய்ய முடியாமல் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கஷ்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு சென்னையில் பெரிய அளவில் சுத்தப்படுத்தும் பணிகளை செய்து வருகிறது. முக்கியமாக சென்னையில் பல தெருக்களில் பல வருடமாக தூர்வாரப்படாமல் இருந்த சாக்கடைகள் தூர்வாரப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னையில் உள்ள திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளில் நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக சென்னையில் மாஸ் கிளீனிங் கேம்ப் என்ற முகாமை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு என்பதால் மக்கள் வெளியே வருவது இல்லை. சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல்கள் எதுவும் இல்லாததால் இதை பயன்படுத்திக் கொண்டு சென்னையை மொத்தமாக சுத்தம் செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

அதைப்போன்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் உள்ள பகுதிகள் மண்டல வாரியாக கண்டறியப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தூய்மைப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து தீவிரப்படுத்தவும், மாநகராட்சியின் தூய்மையை பராமரிக்கவும், மண்டலத்திற்கு ஒரு அலுவலர் என 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தீவிர தூய்மை திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் தூய்மை பணி மேற்கொள்ள நாள்தோறும் சராசரியாக 400க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள், 1500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்ட பொக்லைன், காம்பாக்டர், டிப்பர் லாரிகள், பேட்டரியால் இயங்கும் சிறிய வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வண்டிகள் தூய்மை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. தீவிர தூய்மை பணி துவங்கப்பட்ட கடந்த 27ம் தேதி முதல் கடந்த 1ம் தேதி வரை 989 இடங்களில் 1894 மெட்ரிக் டன் குப்பைகளும், 5511 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகளும் என மொத்தம் 7405 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் சென்னையில் குப்பைகள், கழிவு நீர்கள் தேங்கிய இடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* சிங்கார சென்னையாக  மாற்றியவர் மு.க.ஸ்டாலின்

சென்னையை வடிவமைத்த நபர்களில் முக்கியமானவர் சென்னையின் முன்னாள் மேயரும், தற்போது தமிழத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலின். சென்னையில் தற்போது இருக்கும் பெரும்பாலான பாலங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது தான் கொண்டு வந்தது. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றியதில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

Related Stories: