கேளம்பாக்கம் பன்னாட்டு பள்ளியில் பாலியல் புகார் எதிரொலி சிவசங்கர் பாபா மீது போலீசில் புகார் செய்ய 5 மாணவிகளின் பெற்றோர் முடிவு

சென்னை: சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆன்லைன் வகுப்பில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்குள் கேளம்பாக்கம் பள்ளியின் நிறுவனர் சாமியார் சிவசங்கர் பாபா மீதும் பாலியல் புகார்கள் வந்துள்ளது. சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம் அருகே பிரபல சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுசில்ஹரி பன்னாட்டு உறைவிட பள்ளி உள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு சிபிஎஸ்இ, மாநில பாடத்திட்டம், மான்டிசோரி ஆகிய 3 வகையான பிரிவுகள் உள்ளன. மேலும், பள்ளி வளாகத்திலேயே  ஹாஸ்டலும் உள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சாமியாரின் தீவிர பக்தர்கள் என கூறப்படுகிறது.  

65 ஏக்கர் பரப்பளவில் சாமியாரின் ஆசிரமமாக தொடங்கப்பட்டது. பின்னர், பாதுகாப்புக்காக அதே வளாகத்தில் பள்ளியும் செயல்பட தொடங்கியுள்ளது. அடிக்கடி இந்திய அளவிலான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டங்களும், மாநாடுகளும் இந்த பள்ளி வளாகத்தில் நடந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் பெருமாள் கோயில் ஒன்றும் கட்டப்பட்டு தினசரி பூஜை நடத்தப்படுகிறது. பெரும்பாலான நாட்களில் சிவசங்கர் பாபாவே பெருமாளுக்கு அணிவிக்கப்படும் கவச உடைகளை அணிந்து நானே பெருமாள் என்று கூறிக்கொண்டு காட்சி தருவார். அவருக்கு பால், பழ அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை தொடங்கி அதில் தொடர்பில் இருந்தனர்.

கடந்த வாரம் சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியின் விவகாரம் வெளியில் வந்தபோது அதுபற்றியும் இந்த குரூப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது குழுவில் இருந்த ஒரு மாணவி, தான் படித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, 9ம் வகுப்பு படிக்கும்போது இரவு நேரங்களில் சக மாணவிகள், சாமியாருடன் ஒரே அறையில் இருந்ததை பார்த்ததாகவும், 10ம் வகுப்பு மாணவி ஒருவர், தன்னை பாலியல் ரீதியாக காம இச்சைக்கு சாமியார் பயன்படுத்தி கொண்டதாகவும் பதட்டத்துடன் பதிவு செய்திருந்தார். மேலும், சாமியார், தனது உடைகளை கழற்ற சொன்னதாகவும், தான் போன ஜென்மத்தில் கிருஷ்ணன் என்றும் நீ கோபிகா என்றும் அந்த பிரபல சாமியார் சொன்னதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார். ‘உடைகளை கழற்ற முடியாது’ என்று கூறியபோது, சாமியார் கொதித்து போனதாகவும் அவர் கூறினார்.

பள்ளியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு, ஆல்கஹால் மற்றும் சில போதைப்பொருட்கள் வழங்கப்படுவதாகவும், சாமியார் சொல்படி கேட்டு நடக்க வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்படுவதாகவும் அந்த முன்னாள் மாணவி வாட்ஸ் அப் குழுவில் பதிவு செய்துள்ளார். பள்ளியை ஒட்டி சாமியாரின் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குடியிருப்பை உருவாக்கி உள்ளதாகவும் அந்த பக்தர்கள்தான், சாமியாரை ஒரு கடவுளாக மாற்றி வழிபட்டு இதுபோன்ற செயல்கள் கடவுளுக்கு செய்யும் சேவை என்று கதை கட்டி விடுவதாகவும் அந்த குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்கள் வாட்ஸ் அப் குருப்பில் இருந்தவர்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

மேலும், அந்த சாமியார் ஏற்கனவே தன்னை ஒரு டான்ஸ் சாமியார் என புகழ் பெற்றவர். பல நாடுகளுக்கு சென்று தியானம், யோகா, சொற்பொழிவு செய்வது என பல்வேறு செயல்களை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் கடந்த 2 வாரங்களாக வாட்ஸ் அப் மற்றும் யூ - டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக கடந்த 1ம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் சமூக வலைத்தளங்களில் பரவும் சாமியாரின் பாலியல் புகார் குறித்தும், ஆசிரம வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் எத்தனை மாணவியர் தங்கி படிக்கின்றனர் என்றும், அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் விசாரித்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 2ம் தேதி தமிழ்நாடு பெண்கள் ஆணையம் சார்பில் தலைவர் கௌரி அசோகன் தலைமையில் 3 பேர் குழுவினர், பள்ளியில் விசாரணை நடத்தினர். அதற்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் போதிய ஒத்துழைப்பு தரப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, வரும் 11ம் தேதி குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தின் முன்பு சிவசங்கர் பாபா, அவரது வழக்கறிஞர், முன்னாள் மாணவிகள், பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், 3 ஆசிரியைகள் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டுமென சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறினார். இந்நிலையில், பாலியல் ரீதியாக  பாதிக்கப்பட்ட  5 முன்னாள் மாணவிகளின் பொற்றோர், சிவசங்கர் பாபாவின் மீது ஓரிரு நாட்களில் புகார் அளிக்க உள்ளனர். இதனிடையே புகாருக்கு ஆளாகி உள்ள சாமியார் சிவசங்கர் பாபா திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில்  தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

* கட்டணம் குறித்து கேள்வி எழுப்பினால் டீசி தான்

கடந்த சில ஆண்டுகளாக கல்வி கட்டணம் 4 மடங்காக  உயர்த்தப்பட்டது. இதை  எதிர்த்து கேள்வி கேட்ட பெற்றோர், பல முறை போராட்டம் நடத்தினர். ஆனால், போராட்டம் நடத்தியவர்களின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக, நிர்வாகம் பள்ளியைவிட்டு வெளியேற்றியது. இதேபோல் ஹாஸ்டல் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஒரு மாணவர் ஹாஸ்டலில் தங்கி படிக்க சுமார் ரூ.3 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனால், சாதாரண மாணவ மாணவிகளால் இந்த பள்ளியில் படிக்க முடியாத நிலை உள்ளது.

Related Stories: