டியுசிஎஸ் மூலம் காய்கறி, மளிகை சப்ளை அதிமுக ஆட்சியில் வழங்க வேண்டிய ரூ.25 கோடியை விடுவிக்க வேண்டும்: தொமுச கோரிக்கை

சென்னை: அம்மா உணவகத்துக்கு மளிகை பொருட்கள் வாங்கிய வகையில், அதிமுக ஆட்சியில் தர வேண்டிய ரூ.25 கோடியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு தொமுச சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டியுசிஎஸ் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டியுசிஎஸ் தொமுச பொதுச்செயலாளர் ராஜன் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கை: திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (டியுசிஎஸ்) மூலம், இன்று சென்னை நகர மக்கள் அனைவருக்கும் ரேஷன், மளிகை, மருந்து பொருட்கள், காய்கறிகள், எரிவாயு மற்றும் பெட்ரோல் உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில்,  அம்மா உணவகங்களுக்கு தேவையான எரிவாயு மற்றும் காய்கறி, மளிகை பொருட்களை டியுசிஎஸ் நிறுவனங்கள் மூலம் 2013ம் ஆண்டு முதல் சப்ளை செய்து வருகிறது. அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில்  டியுசிஎஸ் நிறுவனத்துக்கு  சென்னை மாநகராட்சி நிலுவை தொகையாக ரூ.25 கோடி பாக்கி வைத்துள்ளது. தற்போது நிதி நெருக்கடியால் எந்த பயன்களும் வழங்க முடியாமல் டியுசிஎஸ் தவித்து வருகிறது. மேலும், பணம் கிடைக்காததால் டியுசிஎஸ் வளர்ச்சி பாதிப்பு அடைந்துள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்கியதற்கான தொகையைகூட சிவில் சப்ளை அலுவலகத்துக்கு செலுத்த நிதி ஆதாரம் இல்லாமல் டியுசிஎஸ் தள்ளாடுகிறது. வங்கிகளில் பெற்ற கடன் தொகை நிலுவையை செலுத்திட இயலவில்லை. எனவே,  தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் தமிழக முதல்வர் சென்னை மாநகராட்சிக்கு தகுந்த ஆணை பிறப்பித்து டியுசிஎஸ் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி பாக்கி வைத்துள்ள நிதியை வழங்கிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: