கொரோனா பரவலை அலட்சியமாக கையாண்ட தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்புவோம்: தயாநிதி மாறன் எம்பி உறுதி

சென்னை: கொரோனா பர வலை அலட்சியமாக கையாண்ட தேர்தல் ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 1000 பேருக்கு, முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.200 நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. இதில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினர். பின்னர், தயாநிதி மாறன் எம்பி நிருபர்களிடம் கூறுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஆண்டு மார்ச் முதல் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். அதன்படி, தற்போது 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளோம். கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் நீட் தேர்வு வராது எனக்கூறி மக்களை ஏமாற்றியவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர்களுக்கு ஏற்ப தாளம் போட்டுள்ளனர் அதிமுகவினர். ஆனால், எங்கள் முதலமைச்சர் சொன்னதை செய்வார், செய்வதைதான் சொல்வார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதைப்போல் சட்டரீதியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கொரோனா பரவலை அலட்சியமாக கையாண்ட தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச விட வேண்டும் என்றும் கொரோனா பரவலை அலட்சியமாக கையாண்ட தேர்தல் ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்,’ என்றார்.  தொடர்ந்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், ‘கோயில் அர்ச்சகர்கள் சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பதால் அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா காலத்தில் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் பணிபுரிவோர் நிலைமையை ஆராய்ந்து நிவாரணம் அளிப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்,’ என்றார்.

Related Stories: