×

நியுஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

தில்லி அரசு, பெண்கள் இலவசமாக மெட்ரோ ரயில்களிலும் பேருந்துகளிலும் பயணிக்க சிறப்பு சட்டம் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் இருக்கிறது. தில்லியில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதையொட்டி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது கல்லூரி, வேலை என தினமும் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பெண்களுக்கு உதவியாகவும் பாதுகாப்பாகவும் அமையும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தில்லி பெண்கள் பலர், தங்களுக்கு இலவசமாக எதுவும் வேண்டாம் என்றும், பதிலாக மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச சேவை ஏற்பாடு செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

LGBTQ+ சமூகத்தினர் 50 ஆண்டுகளாக தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். 1969ல் தொடங்கிய இந்த போராட்டம், 50 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு தான் உலகம் முழுவதும் இருக்கும் மக்களால் கொண்டாடப்படும் விடுதலை தினமாக மாறியுள்ளது. ஆகவே, ஜூன் 4 அன்று கூகுள் தன் இணையதளப் பக்கத்தில், LGBTQ+ சமூகத்தினரின் போராட்டத்தையும் பெருமையையும் அங்கீகரிக்கும் வகையில், அவர்களின் 50 வருட கால வரலாற்றை பதிவு செய்துள்ளது. ஜூன் மாதம் உலகம் முழுவதும் PRIDE மாதமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.  

தென் ஆப்ரிக்கா பிரதமர் Cyril Ramaphosன் புதிய மந்திரி சபையில் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட்டு, அமைச்சரவையில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெண் தலைவர்களுக்கு அளித்துள்ளார். இதன் மூலம் தென் ஆப்ரிக்கா, பெண் தலைவர்களுக்கு சமமான இட ஒதுக்கீடு வழங்கும் உலகின் 11 நாடுகளில் ஒன்றாக இணைந்துள்ளது. இந்த அறிவிப்பை உலகத்தலைவர்கள் பலரும், பெண்ணிய ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

மிஸ் இந்தியா அழகிப் போட்டி, ஒவ்வொரு வருடமும் நடப்பது நமக்கு தெரிந்ததுதான். ஆனால், இந்த முறை ஃபெமினா இந்திய அழகி போட்டியில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 30 அழகிகளின் படத்தை வெளியிட்டது. அந்த படத்தில், அவர்கள் ஒரே மாதிரியான தோல் நிறத்துடனும், உடல் அமைப்புடனும் இருந்ததால் பெரும் சர்ச்சை உருவானது.

மிகப்பெரிய நிறுவனமான மிஸ் இந்தியா இப்படி ஜெராக்ஸ் காபி போல அழகிகளை தேர்ந்தெடுத்துள்ளது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை நிற தோல், நீளமான முடி என வித்தியாசமே இல்லாமல் இருக்கும் 30 பெண்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலப் பெண்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் டிவிட்டர் வாசிகள் சாடியுள்ளனர்.

ஈரான் நாட்டை சேர்ந்த 11 வயது மாணவி தாரா ஷெரிஃபி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த ஐக்யு சோதனையில், சராசரியான 140 மதிப்பெண்களை விட 22 மதிப்பெண்கள் அதிகமாக பெற்று, 162 புள்ளிகளுடன், உலகின் அதிபுத்திசாலி என்று நம்பப்படுகிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் பெயர்கள் இடம் பெற்றுள்ள அறிவியலாளர்கள் பட்டியலில் தாராவுடைய பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இந்த அறிஞர்களை விடவும் தாரா இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்றிருப்பது உலக வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்ரிக்க கண்டத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலாவியின் தலைவராக தெரேசா காசிண்டமோடோ (Theresa Kachindamoto) பதவியேற்றார். 2015ல் குழந்தை திருமணம் மலாவியில் சட்டவிரோதமாக்கப்பட்டது. ஆனால், பெற்றோர்கள், வறுமை காரணமாக தங்கள் பெண் குழந்தைகளை பராமரிக்க முடியாமல், வயதான ஆண்களுக்கு திருமணம் செய்து வந்துள்ளனர். தெரேசா, மலாவியின் தலைவராக பதவியேற்றவுடனே, 2016ம் ஆண்டு 850 குழந்தை திருமணங்களை ரத்து செய்து, சிறுமிகளை காப்பாற்றி, மீண்டும் பள்ளிப் படிப்பை தொடர வைத்துள்ளார். தனக்கு வந்த கொலை மிரட்டல்களை பொருட்படுத்தாமல், திருமணத்தை ரத்து செய்ய மறுத்த நான்கு துணை தலைவர்களை பதவி நீக்கமும் செய்துள்ளார்

- ஸ்வேதா கண்ணன்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!